search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 31 அடியை தாண்டியது - ஆடி பெருக்கு விழாவுக்கு தண்ணீர் திறக்கப்படுமா?
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 31 அடியை தாண்டியது - ஆடி பெருக்கு விழாவுக்கு தண்ணீர் திறக்கப்படுமா?

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று பிற்பகல் 31 அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி பெருக்கு விழாவுக்கு தண்ணீர் திறக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடகவில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த மாதம் 30-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கடந்த 8-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 5789 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6849 கன அடியாக உயர்ந்தது. இன்று நீர்வரத்து 6715 கன அடியாக இருந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை விட அணைக்கு பல மடங்கு தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கடந்த மாதம் 26-ந் தேதி 21.84 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 29.41 அடியாக இருந்தது. இன்று ஒரே நாளில் ஒரு அடிக்கும் மேல் உயர்ந்து நீர்மட்டம் 30.74 அடியானது. இன்று பிற்பகல் நீர்மட்டம் 31 அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு பண்டிகைக்காக ஜூலை மாதம் 25-ந் தேதி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்தாண்டு அடுத்த மாதம் 3-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது.

    அன்றைய நாளில் காவிரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர். அதற்காக இதுவரை காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்காததால் கரையோர மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும் விரைவில் தண்ணீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது-

    மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம், கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு பண்டிகைக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு உள்பட அனைத்து தகவல்களையும் அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். காவிரியில் கூடுதல் நீர் திறப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×