search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை பெட்ரோலியம் நிறுவனம் கச்சா எண்ணெய் குழாய் பதிப்பதாக வழக்கு
    X

    சென்னை பெட்ரோலியம் நிறுவனம் கச்சா எண்ணெய் குழாய் பதிப்பதாக வழக்கு

    சுற்றுச்சூழல் துறையின் நிபந்தனைகளை மீறி சென்னை பெட்ரோலியம் நிறுவனம் கச்சா எண்ணெய் குழாய் பதிப்பதாக தொடர்ந்த வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.தியாகராஜன். மீனவ தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்க தலைவரான இவர், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி வரை 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு கச்சா எண்ணெயை எடுத்துச்செல்ல சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

    இதற்காக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து 2014-ம் ஆண்டு பெட்ரோலியம் நிறுவனம் அனுமதி பெற்றது. அவ்வாறு அனுமதி அளிக்கும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி சில நிபந்தனைகளை நிறைவேற்ற சுற்றுச்சூழல் துறை உத்தரவு பிறப்பித்தது.

    ஆனால் அந்த நிபந்தனைகளை முறையாக பின்பற்றாமல் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் கச்சா எண்ணெய் குழாய் பதிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி எம்.எஸ்.நம்பியார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.மகேசுவரன் ஆஜராகி வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, மத்திய சுற்றுச்சூழல் துறை விதித்த நிபந்தனைப்படி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் கச்சா எண்ணெய் குழாயை பதித்து வருகிறதா என்பதை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், மத்திய சுற்றுச்சூழல் துறை, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை, ஆகஸ்டு மாதம் 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 
    Next Story
    ×