search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆங்கிலத்தில்பேச கற்றுக்கொள்ளுங்கள்: உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால்
    X

    ஆங்கிலத்தில்பேச கற்றுக்கொள்ளுங்கள்: உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால்

    மாணவிகளே இலக்கணம் பற்றி கவலைப்படாமல் ஆங்கில மொழியில் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் என்று உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் கூறினார்.
    சென்னை:

    சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.ஜானகி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் இந்த வருடத்திற்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாமை தொடங்கிவைத்து பேசியதாவது:-

    டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாமை தொடங்கிவைப்பதில் பெருமை அடைகிறேன். தமிழகத்தில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது இந்திய அளவில் உள்ளதை விட இரு மடங்கு ஆகும். உயர் கல்வி படிப்போர் வயது பெரும்பாலும் 18 முதல் 23 வரையாகும். ஒரு வீட்டில் ஒரு பெண் கல்வி கற்றால் அந்த வீடே பல்கலைக்கழகம் போன்றது ஆகும். அதாவது ஒரு பெண் கல்வி கற்றால் அவர் மட்டும் கல்வி கற்றது இல்லாமல் அந்த வீட்டில் உள்ள அனைவரும் கல்வி கற்க விழிப்புணர்வு ஏற்படுத்துவார். முடிந்தவரை அனைவரையும் கல்வி கற்க வைப்பார்.

    நான் பி.டெக். படித்து முடித்தபோது ஆங்கிலம் தெரியாது. எனக்கு இந்தி தான் தெரியும். அதன்பிறகு 2 வருடம் அமெரிக்காவில் இருந்தேன். அங்குதான் ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டேன். பின்னர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தஞ்சாவூரில் சப்-கலெக்டராக பணி அமர்த்தப்பட்டேன். அப்போது தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன்.

    வேலைவாய்ப்புக்கு ஆங்கிலத்தில் பேசத்தெரியவேண்டும். அப்படி என்றால் தான் கற்றதை வெளிப்படுத்த முடியும். ஆங்கிலத்தில் பேச இலக்கணம் தேவை இல்லை. எந்த மொழிபேசவேண்டுமென்றாலும் அதற்கு மொழியின் இலக்கணம் தேவை இல்லை.

    இவ்வாறு சுனில் பாலிவால் பேசினார்.

    எம்.ஜி.ஆர்.ஜானகி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆலோசனை மைய இயக்குனர் பேராசிரியை ராஜ்யஸ்ரீ இறையன்பு பேசியதாவது:-

    இந்த கல்லூரியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகுப்பில் வேலைவாய்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை கல்லூரியில் படிக்கும்போதே பெற்று விடுகிறார்கள். கடந்த கல்வி ஆண்டில் படித்த மாணவிகளில் 90 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அவர்களை 24 கம்பெனிகள் வந்து கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைக்கு தேர்ந்து எடுத்துள்ளனர்.

    இந்த வருடத்தில் இருந்து அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளோம். அதன்படி அந்த துறை சார்பில் முதல் முதலாக சிவில் சர்வீசஸ் தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், ரெயில்வே தேர்வுகள், வங்கித்தேர்வுகள் உள்ளிட்ட தேர்வுகளுக்கு விருப்பம் உள்ள மாணவிகளுக்கு கல்லூரிக்கு வந்து பயிற்சி அளிக்க உள்ளனர்.

    இவ்வாறு ராஜ்யஸ்ரீ இறையன்பு பேசினார்.

    கல்லூரியின் தாளாளர் லதா ராஜேந்திரன், மாணவிகளின் டீன் அபிதா சபாபதி, குளோபல் டேலண்ட் டிராக் என்ற கம்பெனியின் கூடுதல் துணைத்தலைவர் மிதுன் நாகவதே உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தொடக்கத்தில் துணை முதல்வர் லட்சுமி பாலாஜி வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியை எல்.பூஜா நன்றி கூறினார். 
    Next Story
    ×