search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபித்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த அழைத்து கொன்று புதைத்த கொடூரம்
    X

    கோபித்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த அழைத்து கொன்று புதைத்த கொடூரம்

    அரியலூர் அருகே கோபித்துக்கொண்டு சென்ற மனைவியை சமாதானம் பேசி அழைத்து வந்து கணவர் கொன்று புதைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாங்குளத்தை சேர்ந்தவர் ராமையா. இவரது மகள் கனகவள்ளி (வயது 25). இவருக்கும் உடையார் பாளையத்தை சேர்ந்த தங்க ராசுவின் மகன் அருண் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு பரணி (2) என்ற குழந்தை உள்ளது. அருணுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தாகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் கனகவள்ளி கணவருடன் கோபித்துக்கொண்டு கல்லாங்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் சென்னை தாம்பரம் அருகே சீனிவாசபுரத்தில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இதற்கிடையே அருண் தனது மனைவியை தேடி கல்லாங்குளம் சென்றார். அப்போது அவர் சென்னையில் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. உடனே காரில் அருண் மற்றும் அவரது தந்தை தங்கராசு, தாய் மற்றும் அவரது உறவினர்கள் விஜயா, அவரது மகன் கார்த்திக் ஆகிய 5 பேர் சென்னைக்கு சென்றனர்.

    அங்கு கனகவள்ளியிடம் சமாதானம் பேசி சொந்த ஊருக்கு காரில் அழைத்து வந்தனர். இதற்கிடையே கனகவள்ளி திடீர் என மாயமானர். இது குறித்து அருண் சென்னை சேலையூர் போலீசில் புகார் செய்தார். நாங்கள் காரில் அழைத்து வந்தபோது குழந்தைக்கு பால் வாங்க சென்றுவருவதாக கூறிய கனகவள்ளி திடீரென மாயமாகி விட்டதாக அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    அதேபோல் கனகவள்ளியின் சகோதரர் மணிவண்ணன் தனது சகோதரியை காணவில்லை என உடையார்பாளையம் போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கோர்ட்டு சேலையூர் போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கனகவள்ளியின் கணவர் அருணிடம் நடத்திய விசாரணையில் கனகவள்ளியை கொலை செய்து விட்டதாக அருண் அதிர்ச்சி தகவலை கூறினார்.

    மேலும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் நாங்கள் கனகவள்ளியை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு சமாதானம் பேசி காரில் ஊருக்கு அழைத்து வந்தோம். வரும் வழியில் அவரை கொலை செய்து புதைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

    அவர்கள் கனகவள்ளியை உடையார்பாளையம் ஊரின் அருகே சுமார் 10 கி.மீ. தூரத்தில் கொன்று புதைத்தாக கூறினார். நேற்று போலீசார் பல இடங்களில் தேடினர். ஆனால் கனகவள்ளியின் உடல் கிடைக்கவில்லை. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது.

    சேலையூர் போலீசாருடன் குவாகம் போலீசாரும் அருணுடன் சென்று தேடினர். இந்த நிலையில் இன்று குவாகம் அருகே கொன்று புதைக்கப்பட்ட கனகவள்ளியின் உடல் கிடைத்தது. பின்னர் அருண், அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தலைமறைவான அருணின் தந்தை தங்கராசு உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×