search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சத்தீவை மீட்பதே மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்: முதல்-அமைச்சர் பழனிச்சாமி
    X

    கச்சத்தீவை மீட்பதே மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்: முதல்-அமைச்சர் பழனிச்சாமி

    கச்சத்தீவை மீட்பதே மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று அப்துல்கலாம் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
    ராமேசுவரம்:

    மணிமண்டப திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அப்துல்கலாம் மணி மண்டப திறப்பு விழாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    அம்மாவின் உத்தரவின் பேரில் வழங்கப்பட்ட இடத்தில் அப்துல்கலாமின் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அம்மா ஆட்சிக்காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கும், மனித வள மைய மேம்பாட்டிற்கும் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ. 5 லட்சத்துடன் 8 கிராம் தங்கப்பதக்கத்துடன் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனை அம்மா தன் வாழ்நாளிலேயே செயல்படுத்தி அப்துல்கலாம் மீதான மரியாதையை வெளிப்படுத்தினார்கள்.

    ராமநாதசுவாமி கோவில் மற்றும் அப்துல்கலாம் நினைவிடம் போன்று இன்னும் பல பெருமைகளை பெற்றிருக்கும் ராமேசுவரத்தை அழகுபடுத்தி வருவது மீனவர்கள் தான். அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கை அமைதியிழந்து காணப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.

    தமிழகத்தில் உள்ள 5 கடலோர மாவட்ட கிராமங்களில் 3 லட்சத்துக்கு அதிகமான மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல இன்னல்களை மீன்பிடிக்க செல்லும் போது சந்தித்து வருகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்க வேண்டும்.

    நவீன ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டத்தை செயல்படுத்தக்கோரி அம்மா, பிரதமரை நேரில் சந்தித்து சிறப்பு நிதி ரூ. 1520 கோடி ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை நானும் வலியுறுத்தினேன். அதனை ஏற்று பிரதமர் மத்திய அரசு பங்களிப்பாக ரூ.200 கோடி வழங்கியுள்ளார். தமிழக அரசு 86 கோடி ஒதுக்கியுள்ளது.

    ராமேசுவரம் சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ராமேசுவரம் நகராட்சிக்கு ரூ. 7.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ. 49,80 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    தனுஷ்கோடியில் அமைக்கப்பட்டுள்ள சாலையால் ராமேசுவரம் மக்களின் 50 ஆண்டு கால கனவு நினைவாகியுள்ளது. ராமேசுவரம் நகர வளர்ச்சிக்கு ரூ. 78 கோடியே 17 லட்சத்தை ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×