search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரம் அருகே எடுக்கப்படும் 5 குவாரிகளின் தண்ணீர் குடிநீருக்கு ஏற்றது: ஆய்வில் தகவல்
    X

    தாம்பரம் அருகே எடுக்கப்படும் 5 குவாரிகளின் தண்ணீர் குடிநீருக்கு ஏற்றது: ஆய்வில் தகவல்

    தாம்பரத்தை அடுத்த எருமையூரில் உள்ள 5 கல்குவாரிகள் தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று சோதனையில் தெரியவந்துள்ளது.
    தாம்பரம்:

    சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவமழை பொய்த்ததால் ஏரி, குளங்களில் நீர் இருப்பு குறைந்து உள்ளது.

    சோழவரம், புழல் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. தற்போது பூண்டி ஏரியில் 20 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 81 மில்லியன் கன அடி தண்ணீரும் உள்ளது.

    பூண்டி ஏரியில் உள்ள தண்ணீரை சென்னை குடிநீருக்கு அனுப்ப முடியாததால் கடந்த மாதமே தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து குடிநீர் வாரிய அதிகாரிகள் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள 22 கல்குவாரி நீர் மற்றும் போரூர் ஏரி தண்ணீரை சுத்திகரித்து வினியோகித்து வருகின்றனர். இதனால் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகாரிகள் ஓரளவு சமாளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாம்பரத்தை அடுத்த எருமையூரில் உள்ள 5 கல்குவாரிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை குடிநீருக்கு பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக அந்த கல்குவாரி தண்ணீரை பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட்டுக்கு அனுப்பி வைத்தனர். சோதனை முடிவில் அந்த தண்ணீரை சுத்தகரித்து குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதைதொடர்ந்து 5 கல்குவாரிகளில் தேங்கி நிற்கும் நீரை பைப் லைன் மூலம் எவ்வாறு கொண்டு வருவது எனவும், அதனை சுத்திகரித்து பொது மக்களுக்கு வினியோகிப்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    சிக்கராயபுரம் கல் குவாரிகளில் இருந்து செப்டம்பர் முதல் வாரம் வரை மட்டுமே தண்ணீரை எடுக்க முடியும். இதன் பின்னர் சென்னைக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு குறையும் நிலை உருவாகும்.

    எனவே எருமையூர் கல்குவாரிகளில் இருந்து விரைந்து தண்ணீர் எடுப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி 2 மாதத்தில் முடிவடையும் என்று தெரிகிறது.

    இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, “தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு குவாரிகளில் இருந்து தண்ணீரை சுத்திகரித்து அனுப்பி வருகிறோம்.

    எருமையூரில் உள்ள குவாரிகளில் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெற முடியும். இதற்கான பணி நடைபெற உள்ளது” என்றார்.
    Next Story
    ×