search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதிராமங்கலம் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி தீர்வுகாண வேண்டும்: ஜி.கே.மணி
    X

    கதிராமங்கலம் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி தீர்வுகாண வேண்டும்: ஜி.கே.மணி

    கதிராமங்கலம் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி தீர்வுகாண வேண்டும் என பா.ம.க. மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி கூறியுள்ளார்.
    கும்பகோணம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி, மாநில உழவர் பேரவை தலைவர் ஆலயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஜி.கே. மணி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் நீர் ஆதாரத்திலும், மேலாண்மையிலும் இந்தியாவில் மிகவும் பின் தங்கிய கடைசி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. எனவே மழைநீர் மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாத்து பயன்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களை விட தண்ணீர் பிரச்சினையில் தமிழகம் கவனக்குறைவாகவும், வேகம் குறைவாகவும் உள்ளது. மற்ற மாநிலங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட பாதுகாக்க வருகிறது.

    தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட 12 மாவட்ட பாசனங்களின் ஆதாரமாகவும், நெற்களஞ்சியமாகவும் தஞ்சை இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலை இல்லை. அகண்ட காவிரி இன்று வறண்ட காவிரியாகி உள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மத்திய அரசு ஏற்க மறுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. நீர் ஒழுங்காற்று குழு அமைக்காததால் தண்ணீருக்காக நாம் அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நமது உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார பயணம் ஏற்படுத்த உள்ளோம்.

    அதன்படி விழிப்புணர்வு பிரசார பயணம் ஒகேனக்கல்லில் நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந்தேதி பூம்புகார் சென்றடைகிறது.

    கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட மறுக்கிறது. மாநில அரசு உத்தரவாதம் அளிக்க மறுக்கிறது. அதே போல் நெடுவாசல் போராட்டம் 105 நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது.

    நாகை, கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு அகதிகளாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த மாவட்டங்களை மாநில அரசு பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×