search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த கடையில் விசாரணை நடத்திய போலீசார்.
    X
    கொள்ளை நடந்த கடையில் விசாரணை நடத்திய போலீசார்.

    நாகர்கோவிலில் செல்போன் கடையை உடைத்து ரூ.10 லட்சம் பொருட்கள் கொள்ளை

    நாகர்கோவிலில் இன்று செல்போன் கடையை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    ஈத்தாமொழியை அடுத்த நங்கூரான்பிலாவிளையை சேர்ந்தவர் ஸ்ரீராமச்சந்திரன்.

    இவருக்கு சொந்தமாக நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் 2 செல்போன் கடைகளும், அலெக்சாந்திரா பிரஸ் ரோட்டில் இன்னொரு செல்போன் கடையும் உள்ளது.

    இம்மூன்று கடைகளும் தினமும் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடப்படும். கடை ஊழியர்களே தினமும் கடையை மூடிவிட்டு செல்வார்கள். இது போல நேற்று இரவும் அவர்கள் கடையை மூடிவிட்டு சென்றனர்.

    இன்று காலையில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு அதன் ஊழியர்கள் சென்றனர். அப்போது கடையின் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு வளைந்து இருந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது பற்றி கடை உரிமையாளர் ஸ்ரீராமச்சந்திரனுக்கு தெரிவித்தனர்.

    அவர் விரைந்து வந்து பார்த்த போது கடையில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. கடையில் இருந்து விலை உயர்ந்த செல்போன்கள், அதன் கவர் பிரிக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தது. இது போல ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போயிருந்தது.

    அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராமச்சந்திரன் இது பற்றி வடசேரி போலீசில் புகார் செய்தார். நாகர்கோவில் டி.எஸ்.பி. கோபி, வடசேரி இன்ஸ்பெக்டர் பொறுப்பு அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் அய்யர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவாகி உள்ளனவா? என்பதை பரிசோதித்தனர்.

    மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு காமிராவில் கொள்ளையரின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என்பதையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 2 வாலிபர்கள் முகமூடி அணிந்து கடைக்குள் வருவது பதிவாகி இருந்தது.

    பின்னர் அந்த வாலிபர்களில் ஒருவர் கடைக்கு வெளியே நின்று கொண்டார். மற்றொருவர் உள்ளே சென்று கடையில் உள்ள பொருட்களை மூட்டையாக கட்டி வெளியே எடுத்து செல்வது போன்ற காட்சிகள் கேமிராவில் பதிவாகி இருந்தது.

    கொள்ளையர் இருவரும் முகமூடி அணிந்து இருந்ததால் அவர்கள் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே அவர்கள் அருகில் உள்ள கடைகளின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதை சோதித்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் சமீபநாட்களாக வழிப்பறி, திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இன்று பூட்டிய கடைக்குள் புகுந்து கொள்ளையர் ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில் கோர்ட்டு ரோடு பகுதியில் எப்போதும் ஆள்நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். அங்கேயே கடையின் ‌ஷட்டரை உடைத்து கொள்ளை நடந்திருப்பது பொது மக்கள் மற்றும் வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் ஈடுபட்ட கொள்ளையரை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×