search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய லெட்சுமிபுரம் கிராம மக்கள்
    X
    ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய லெட்சுமிபுரம் கிராம மக்கள்

    ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக லெட்சுமிபுரம் கிராம மக்கள் மீண்டும் போராட்டம்

    ராட்சத கிணறு பிரச்சினை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக லெட்சுமிபுரம் கிராம மக்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில் வெட்டப்பட்ட ராட்சத கிணறால் கிராம மக்களுக்கு நீராதாரம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    இதனையடுத்து நிலம் மற்றும் கிணறை கிராம மக்களுக்கு வழங்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதுவரை கிணற்றில் இருந்து 90 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி தினசரி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே அந்த இடம் சுப்புராஜ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    ஓ.பன்னீர்செல்வம் கிராம மக்களுக்கு தானமாக வழங்க இருந்த கிணறை தனியாருக்கு விற்பனை செய்ததால் லெட்சுமிபுரம் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தங்களை ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றி விட்டதாக தெரிவித்த அவர்கள் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று லெட்சுமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்ற பேனர் வைக்கப்பட்டது. அதன் முன்பு 1000-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் காலிக்குடங்களுடன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பொதுப்பணித்துறை ஒரு ஆற்றையே ஓடையாக மாற்றியுள்ளனர். ஆற்றுக்கு அருகாமையில் கிணறு இருக்க கூடாது என்று விதி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பொதுப்பணித்துறையினர் வறட்டாறு என்ற பெயர் பலகையை மாற்றி விட்டு வறட்டு ஓடை என வைத்துள்ளனர். வறட்டாறு மூலம் 13 கண்மாய்கள் நிரம்புகின்றன. 74 ஏக்கரில் இரு போக விவசாயம் நடந்து வந்தது.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆற்றை பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டு ஓடை என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

    ஒவ்வொரு துறை அதிகாரிகளும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். அதன்படி இன்று பொதுப்பணித் துறையினரை கண்டித்து காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும் வாயில் கருப்புத்துணி கட்டியும் எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். நாளை முதல் ஓ.பி.எஸ்.சுக்கு உடந்தையாக இருந்த ஒவ்வொரு துறை அதிகாரிகளையும் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதோடு உண்ணாவிரதத்திலும் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக மீண்டும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் அங்கு அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.


    Next Story
    ×