search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறி பாய்ந்து வரும் காட்சி
    X
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறி பாய்ந்து வரும் காட்சி

    மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்வு

    நேற்று 26.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் சுமார் ஒன்றரை அடி உயர்ந்து 28 அடியாக உயர்ந்துள்ளது.
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக கன மழையாக பெய்தது.

    இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த அணைகளில் இருந்து நேற்று முன்தினம் முதல் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவை கடந்து நேற்று மாலை ஒகேனக்கலுக்கு வந்தடைந்தது.

    இதனால் ஒகேனக்கலில் நேற்று காலை 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்துள்ளனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து ஆனந்தமாக அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பரிசல்களில் உற்சாகமாக சவாரி சென்றும் மகிழ்ந்தனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்றிரவு மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் நேற்று காலை 2444 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்றிரவு முதல் 5759 கன அடியாக அதிகரித்தது.

    மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தணணீரை விட அணைக்கு பல மடங்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 26.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் சுமார் ஒன்றரை அடி உயர்ந்து 28 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களிலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×