search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை
    X

    அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை

    அமைச்சர் தலைமையில் நடந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.
    தாம்பரம்:

    சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து 9-வது கட்ட பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.

    இதில் கூடுதல் தலைமை செயலாளர் பி.டபில்யூ.தேவிதார், நிதித்துறை கூடுதல் செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 47 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 94 பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

    அப்போது கல்வி முன்பணம், கல்வி உதவித்தொகை, திருமண கடன் தொடர்ந்து வழங்கப்படும். தையற்கூலி, இரவு படி உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டம் முடிந்தபின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொழிற்சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அடுத்தகட்ட (10-வது கட்ட) பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நிறைவு செய்வது என முடிவு செய்து இருக்கிறோம். ஊதிய உயர்வு சதவீதத்தில் வேறுபாடு உள்ளது. அதுகுறித்து துணைக்குழு கூடி முடிவு செய்து, முதல்-அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்படும்.

    ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1,250 கோடி நிலுவைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள தொகை வரும் செப்டம்பர் மாதம் கணக்கிட்டு வழங்கப்படும்.

    தமிழகத்தில் மட்டும் தான் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையை போக்குவரத்து கழகம் மேற்கொள்கிறது. தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பேட்டரி பஸ்களுக்கு முதலீடு அதிகம். பேட்டரி பஸ்கள் மிக விரைவில் இயக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்விக்கடன், கல்வி உதவித்தொகை, திருமண கடன், சீருடை போன்ற அறிவிப்புகள் புதியவை அல்ல. ஏற்கனவே தருவோம் என்று சொல்லி தராமல் இருந்தவை தான். இது எந்த விதத்திலும் அரசின் சாதனை என்று சொல்ல முடியாது.

    ஊதிய உயர்வு தொடர்பாக முடிவு எட்டப்பட வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×