search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம்
    X

    ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கிராமத்தினர் மீண்டும் போராட்டம்

    பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான கிணற்றை கிராமத்துக்கு எழுதி தரும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த கிராமக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில் வெட்டப்பட்ட ராட்சத கிணறால் கிராம மக்களுக்கு நீராதாரம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    இதனையடுத்து நிலம் மற்றும் கிணறை கிராம மக்களுக்கு வழங்கப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதுவரை கிணற்றில் இருந்து 90 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி தினசரி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த இடம் சுப்புராஜ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    சுப்புராஜ் கிணற்றை வழங்க முடியாது. வேண்டுமானால் 20 செண்ட் நிலத்தை மட்டும் தருகிறேன். அதில் கிணறு வெட்டிக் கொள்ளுங்கள் என்று கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதனால் ஆவேசமடைந்த மக்கள் நேற்று இரவு கிராம கமிட்டி கூட்டத்தை கூட்டினர். தலைவர் கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தெரிவிக்கையில், தேனியில் கடந்த 13-ந் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், கலெக்டர் வெங்கடாசலம், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். நிலத்தை வாங்கிக் கொண்டால் தானமாக கிணறை தருவதாக ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்தார். ஆனால் எங்களுக்கு தெரியாமல் அதற்கு முதல் நாளான 12-ந் தேதியே பத்திரத்தை அவரது நண்பர் சுப்புராஜூக்கு எழுதி கொடுத்துள்ளார்.

    முன்னாள் முதல்வராக இருந்தவர் இப்படி எங்களை ஏமாற்றுவார் என நினைக்கவில்லை. இது எங்களை மிகவும் வேதனையடைய வைத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்தது போல நாங்கள் நிலத்தை வாங்க தயாராக உள்ளோம். அதற்காக நிதி ஆதாரங்களை திரட்டி வருகிறோம்.

    எனவே ஓ.பன்னீர் செல்வம் இப்பிரச்சினையில் தலையிட்டு கிணறு மற்றும் விவசாய நிலத்தை கிராம மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தொடர்ந்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (26-ந் தேதி) முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×