search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு
    X

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு

    கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    மேட்டூர்:

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கைகொடுக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்து வந்தது. இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டமும் மிகவும் குறைந்து காணப்பட்டது. கடந்த மாதம் நீர்மட்டம் 24 அடியாக குறைந்து இருந்தது. இதனால் கடந்த மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இன்று வரை இதே நிலைதான் தொடர்கிறது.

    இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த மாதம் இறுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 8-ந் தேதி மேட்டூர் அணையை வந்தடைந்தது. நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் நீர்திறப்பு அளவு 1,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் அணைக்கு தண்ணீர் வரத்து குறையத்தொடங்கியது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. எனவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து இருக்கிறது.

    நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,837 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று 2,207 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அணைக்கு நீர்வரத்து 2,207 கனஅடியாக அதிகரித்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

    நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 25.75 அடியாக இருந்தது. நேற்று 25.95 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×