search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனித சங்கிலி போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு
    X

    மனித சங்கிலி போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு

    ஜூலை 27-ல் திமுக சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு அளிக்கும் என எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மாநில மத்திய அரசுகள் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 27-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் “மனித சங்கிலி போராட்டம்” நடத்துவது என்று திமுக தீர்மானித்துள்ளது.

    ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பறிக்கவும், தமிழகத்தில் தழைத்து நிற்கும் சமூகநீதி கொள்கைக்கு முடிவு கட்டவுமே மத்திய பாஜக தலைமையிலான மக்கள் விரோத அரசால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை மனிதநேய மக்கள் கட்சி ஆரம்பம் முதலே எடுத்துரைத்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற தேர்வுகளால் சமூகநீதி குலையாமல் பாதுகாத்திட ஜனநாயக அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்று ஆதரவளித்து வருகிறது.

    ஜூலை 27-ல் திமுக சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கும் மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு அளிக்கிறது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியினர் பெருமளவில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இப்போராட்டம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துத்தரப்பு மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது.

    எங்களது ஆதரவு மாணவ இயக்கமான சமூக நீதி மாணவர் இயக்கமும் இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×