search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரத்த அழுத்தம் காரணமாக டிராபிக் ராமசாமி ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    ரத்த அழுத்தம் காரணமாக டிராபிக் ராமசாமி ஆஸ்பத்திரியில் அனுமதி

    திருப்பூரில் விளம்பர பதாகைகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட டிராபிக் ராமசாமி உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திருப்பூருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் அவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள விளம்பர பதாகையை அகற்றக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் நேற்று திருப்பூர் குமரன் ரோட்டில் வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது வடக்கு தாசில்தார் அலுவலக நுழைவு வாசலில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விளம்பர பதாகை ஆகியவற்றை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதிக்கு திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அவர் விளம்பர பதாகையை அகற்றும் வரை அங்கிருந்து செல்லமாட்டேன் என கூறி மறுத்துவிட்டார். அதன் பின்னர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விளம்பர பதாகையை அகற்றக்கோரி அந்த பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகும் அந்த விளம்பர பதாகை அகற்றப்படவில்லை. இதன் பின்னர் உடல்நிலை சரியில்லாததால் டிராபிக் ராமசாமி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை 4 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் இ.சி.ஜி.எடுத்தனர்.

    இதில் அவருடைய இதய துடிப்பு சீராக இருப்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு ரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் பேரில் அவருக்கு அங்கு தொடர்ந்து 2-வது நாளாக இன்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×