search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    X
    கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: கோவை வ.உ.சி. மைதானத்தில் 2-வது நாளாக பாதுகாப்பு

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வ.உ.சி. மைதானத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 2-வதுநாளாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    கோவை:

    தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம்-கொடியாலம் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டது.

    இதனால் அந்தப்பகுதியில் உள்ள விளைநிலங்களும், குடிநீரும் பாதிக்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கதிராமங்கலம் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ‘என் தேசம் என் மக்கள்‘ அமைப்பின் நிறுவனர் தமிழ்மகன் அலி தலைமையில் கல்லூரி மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலையில் கோவை வ.உ.சி. மைதானத்தில் திரண்டனர்.

    பின்னர் மாணவர்கள் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் விவசாயத்தை அழிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்யக்கோரி அறவழி போராட்டம் என்ற பேனரை பிடித்தபடி அங்கு அமர்ந்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்றனர்.

    இதையடுத்து சில மாணவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் தமிழ்மகன் அலி உள்பட 8 மாணவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து கோ‌ஷம் எழுப்பினர்.

    எச்சரிக்கையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரையும் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினார்கள். அத்துடன் அங்கு கலைந்து செல்லாமல் நின்றிருந்த மேலும் 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வ.உ.சி. மைதானத்தில் குவிய வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மைதானத்தின் 4 புறங்களிலும் 2-வதுநாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அந்த வழியே வருபவர்கள் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இதே மைதானத்தில் தான் போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×