search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    கதிராமங்கலம் கிராமத்தில் கஞ்சி குடித்து காத்திருப்பு போராட்டம்

    கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கிராமத்தில் கஞ்சி குடித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்ட 10 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இக்கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி அங்குள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தின் 61-வது நாளான நேற்று காலை விறகு அடுப்பில் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் வழங்கினர். மதியம் எலுமிச்சை சாதம் சமைத்து சாப்பிட்டனர். போராட்டம் தொடங்கி 61 நாட்கள் ஆன நிலையிலும் கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது வேதனை அளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அண்ணாத்துரை கதிராமங்கலத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பல தெருக்களை ஆய்வு செய்தார்.

    நருவெளியில் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதையும், வாய்க்கால் தூர் வாரும் பணியையும் பார்வையிட்டார். பின்னர் தர்மராஜன் சாலை, மணல் மேட்டுத் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் பணிகளை பார்வையிட்டார்.

    தொடர்ந்து குத்தாலம்-35 என்ற எண்ணுள்ள எண்ணெய் கிணற்றின் குழாயில் கசிவு ஏற்பட்ட பகுதியையும், விவசாயி ஸ்ரீராமின் வயலில் எண்ணெய் படலம் அகற்றப்பட்டதையும் கலெக்டர் அண்ணாத்துரை ஆய்வு செய்தார்.

    கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப் குமார், திருவிடை மருதூர் தாசில்தார் கணேஷ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.



    Next Story
    ×