search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகையிட்ட காட்சி.
    X
    ஆடலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகையிட்ட காட்சி.

    திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 5 கிராம மக்கள் முற்றுகை

    திண்டுக்கல் அருகே ஆடலூர் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 5 கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரும்பாறை:

    திண்டுக்கல் அருகே பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. ஆடலூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் பாதிக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதும் டாஸ்மாக் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

    அதிகாரிகள் மாற்று ஏற்பாடாக ஊருக்கு வெளியே புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆடலூர், கே.சி.பட்டி, காந்திபுரம், பூமலை, பெரியூர் ஆகிய 5 கிராம மக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

    பின்பு கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1000-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது உள்ள மதுபானங்கள் விற்ற பின்பு கடையை மூடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் இந்த கடையை திறக்க கூடாது. உள்ளே இருக்கும் மதுபானங்களை அதி காரிகள் முன்னிலையில் எடுத்துச்செல்லுங்கள் என கூறினர்.

    இதனையடுத்து அதிகாரிகள் டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட்டனர். மேலும் பொதுமக்களிடம் ஊழியர்கள் வந்து கடையை திறந்தால் எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள். உடனே மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    கொடைக்கானல் வெள்ளைப்பாறை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த டி.எஸ்.பி செல்வம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுங்கள் என கூறினார். இதனால் பொது மக்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.

    மதுக்கடையை அகற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



    Next Story
    ×