search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே உள்ள தேன்வயல் ஆதிவாசி கிராமம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
    X
    கூடலூர் அருகே உள்ள தேன்வயல் ஆதிவாசி கிராமம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

    நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து கூடலூரில் உள்ள தேன்வயல் உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் ஆதிவாசி மக்கள் வீட்டை காலி செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது. இதனால் பைக்காரா அணை, டி.கே. ஏரி ஆகியவற்றின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

    பைக்காரா அணை 110அடி கொண்டதாகும். தற்போது 90 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. டி.கே. ஏரி நிரம்பி வழிந்தன. நடுவட்டம் பகுதியில் கனமழையால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆற்றங்கரையோரம் செல்லவேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    ஊட்டி- கூடலூர் சாலையில் 15 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்க போர்க்கால நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

    பாலத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கூடலூரில் உள்ள தேன்வயல் உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் ஆதிவாசி மக்கள் வீட்டை காலி செய்தனர்.

    வெளியேறிய மக்கள் அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர் மழையால் ஆதிவாசி கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

    இந்தநிலையில் கூடலூர் பகுதியில் மீண்டும் கனமழை கொட்டியது. இதனால் கூடலூர் ஊட்டி மற்றும் மைசூரு செல்லும் சாலைகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    மேலும் அனுமாபுரம் என்ற இடத்தில் ராட்சத மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் கூடலூர் காளம்புழா பகுதியில் மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. இதை தீயணைப்பு படையினர் அப்புறப்படுத்தினர்.

    கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் குடியிருப்புகளின் அருகே தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி சூண்டி பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதில் கடையில் இருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன. மேலும் சீபோர்த் பகுதியில் உள்ள கோவில் மீது ராட்சத மரம் விழுந்தது. இதில் கோவில் கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது.

    சந்தனமலை கிளன்வன்ஸ் பகுதியில் பாறை சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஓவேலி, பாண்டியாறு, மாயார், பொன்னானி ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    பந்தலூர் தாலுகா அய்யங்கொல்லி அருகே குழிக்கடவு பகுதியில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் மணி என்பவரது வீடு சேதம் அடைந்தது. தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் பலத்த காற்று காரணமாக ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த 3 ராட்சத மரங்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரே நேரத்தில் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இன்றும் ஊட்டி, அவலாஞ்சி, எமரால்டு, அப்பர் பவானி ஆகிய இடங்களில் மழை பெய்தது. தொடர் மழையால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.


    Next Story
    ×