search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100-வது நாளை எட்டுகிறது ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான நெடுவாசல் போராட்டம்: தீர்வு எப்போது?
    X

    100-வது நாளை எட்டுகிறது ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான நெடுவாசல் போராட்டம்: தீர்வு எப்போது?

    நாளை நெடுவாசல் போராட்டம் 100-வது நாளை எட்டும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் நெடுவாசல் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் 110 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    அதன்படி தமிழகத்தில் புதுக் கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயுவை தங்கள் பகுதியில் எடுக்கக் கூடாது எனவும், அதனால் தங்கள் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிப்படையும் என கூறி அப்பகுதி பொதுமக்கள் முதற்கட்டமாக போராட்டம் நடத்தினர்.

    அப்போது மத்திய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போராட்டம் நடத்திய பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை மந் திரி தர்மேந்திர பிரதான் புதுக்கோட்டை உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதியில் எரிவாயு எடுக்க அனுமதி அளித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை அறிந்த நெடுவாசல் மக்கள் மீண்டு ம் 2-ம் கட்டமாக போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இங்கு ஹைட்ரோ கார்பன் எனும் எரிவாயு எடுத்தால் ஏற்படும் அபாயம் குறித்து பிரச்சாரம் செய்தனர். பின்னர் கிராம சபை கூட்டம் நடத்தினர். அதில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 2-ம் கட்ட போராட்டத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் 12-ந் தேதி முதல் போராட்டம் தொடங்கியது.

    இதில் மத்திய, மாநில அரசுகளை கவரும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. மண்சோறு சாப்பிடுதல், எரிவாயு சாப்பிடுதல், எரிவாயு குழாய் நெஞ்சில் பாய்ந்து விவசாயிகள் தற்கொலை செய்வது என அரசின் கவத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான நூதன போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மக்கள் அனுமதியளித்தால் மட்டுமே அப்பகுதியில் எரிவாயு எடுக்கப்படும் என்று கூறிவருகின்றனர். அதற்கு எதிராக போராடும் மக்கள் குறித்து அரசு கண்டு கொள்ளவில்லை என நெடுவாசல் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இன்று நெடுவாசல் போராட்டம் 99-வது நாளை எட்டியுள்ளது. வழக்கம்போல் பொதுமக்கள் நாடியம்மன் கோவில் திடலில் கூடி அரசுக்கு எதிராகவும், ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் எரிவாயு எடுப்பதை தங்கள் பகுதியில் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகளை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று 98-வது நாளாக நடைபெற்ற போராடத்தில் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக போராடிய சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும், மாணவியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று மெழுகுவர்த்தியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாளை நெடுவாசல் போராட்டம் 100-வது நாளை எட்டும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் கட்சிகளின் உட்பூசல் மற்றும் கட்சி விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு நெடுவாசல் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

    மேலும் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அனைத்து தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி இத்திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    முதற்கட்டமாக நடத்திய போராட்டத்தின் போது மாரடித்து ஒப்பாரி வைத்த ஒரு பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மதுரை ஐகோர்ட்டு அனுமதியுடன் புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
    Next Story
    ×