search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து பணியாற்றி வருகிறது: வைகோ பேச்சு
    X

    மக்கள் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து பணியாற்றி வருகிறது: வைகோ பேச்சு

    மக்கள் நலனுக்காக தொடர்ந்து ம.தி.மு.க. பணியாற்றி வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள காரணம் பேட்டையில் திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்து ரத்தினம்,கவின் நாகராஜ், சின்னசாமி, தமயந்தி கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்றார்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.

    தமிழக அரசியல் அரங்கில் வெற்றி பெற்றிட தொடர்ந்து ம.தி.மு.க. பயணிக்கும். நதி நீர் இணைப்பு மசோதாவை மக்களவையில் மதிமுக கொண்டு வந்தது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் வசம் போகாமல் ம.தி.மு.க. தடுத்தது.

    இதுபோல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து ம.தி.மு.க. பணியாற்றி வருகிறது. அ.தி.மு.க.-தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் ஆள் பலம், பண பலம் எல்லாவற்றிலும் பெரிய திராவிட கட்சிகள். இவை ஆட்சி அதிகாரத்தையும் மாறி, மாறி கைப்பற்றி ஆட்சி புரிந்துள்ளது. ஆனால் அண்ணா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட ஏன் ஆர்வம் இல்லை? தற்போதைய நிலையை பார்க்கும் போது மாநில உரிமை பறிபோகி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.

    அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கொடி, சின்னம், சட்டம், அதிகாரங்கள் உள்ளன. அதனால் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்று அழைக்கப்படுகிறது. அது போல் இந்தியாவிலும் நிலை மாறி இந்திய ஐக்கிய நாடுகள் என்று அழைக்கப்பட வேண்டும். தமிழக அரசு தடுமாற்றத்துடன் தெளிவற்ற நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ம.தி.மு.க அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் ஈரோடு கணேசமூர்த்தி, முன்னாள் எம்.பி. டாக்டர் கிருஷ்ணன்,மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிசாமி, ஆர்.ஆர்.ரவி உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

    Next Story
    ×