search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுங்கையூர் தீ விபத்து: 4 பேர் கவலைக்கிடம் - 10 பேருக்கு தீவிர சிகிச்சை
    X

    கொடுங்கையூர் தீ விபத்து: 4 பேர் கவலைக்கிடம் - 10 பேருக்கு தீவிர சிகிச்சை

    சென்னை கொடுங்கையூரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதை தவிர மேலும் 10 பேருக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    கொடுங்கையூர் பேக்கரி கடையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் பலியானார். 48 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் கீழ்ப்பாக்கம்-ஸ்டான்லி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களில் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பரமானந்தம் (67) உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். 82 சதவீத தீக்காயங்களுடன் அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொடுங்கையூர் விவேகானந்த நகரை சேர்ந்த பரமானந்தம் தனியார் நிறுவன காவலாளி ஆவார். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். தீ விபத்து ஏற்பட்ட உடன் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இது பற்றி புகார் செய்ய அவ்வழியாக மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற போது தீ விபத்தில் சிக்கி கொண்டார்.

    கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் கண்ணீருடன் காத்திருக்கும் பரமானந்தத்தின் மகன் கோபி, மகள் சித்ரா ஆகியோர் தங்களது தந்தை உயிர் பிழைப்பாரா? என்கிற ஏக்கத்துடன் காணப்பட்டனர்.

    கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக தாங்களாகவே முன் வந்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சென்று விட்டனர். புருஷோத்தமன், ஆனந்தன், லட்சுமணன், அந்தோணி, ஜெயப்பிரகாஷ், வேலு, மகிழ்வாணன், சத்யராஜ், முகமது அத்துல்லா, முகமது இம்ரான், திவாகர், பாபு ஆகிய 12 பேரும் நேற்று கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவர்களில் ஆனந்தன் பேக்கரி கடை உரிமையாளர் ஆவார். அவரும் நேற்று நடந்த தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு 64 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் காவலாளி பரமானந்தத்துடன் மேலும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாஸ்கர், கிஷோர், பார்த்தீபன், மணிகண்டன், கண்ணன், இளையராஜா, அபிமன்யூ, நவாஸ் ஆகிய 8 பேரும் பலத்த தீக்காயங்களுடன் காணப்படுகிறார்கள்.

    இவர்கள் அனைவருக்கும் 40 சதவீதத்திலிருந்து 65 சதவீதம் வரையில் தீக்காயம் உள்ளதாக ஆஸ்பத்திரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீ விபத்தில் மோனிஷ் (11) என்ற சிறுவன் 47 சதவீத தீக்காயங்களுடன் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    இவர்களை தவிர மேலும் 9 பேருக்கும் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் பல்வேறு புகார்களை கூறி உள்ளனர். பரமானந்தத்தின் மகன் கோபி கூறும்போது, “ தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 47 நிமிடம் கழித்து ஆம்புலன்ஸ் தாமதமாக வந்தது” என்று தெரிவித்தார். மேலும் எனது தந்தைக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    மகள் சித்ரா கூறும் போது, “எங்கள் அப்பா 82 சதவீதம் தீக்காயம் அடைவதற்கு ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததே காரணம்” என்றார்.

    பார்த்தீபன் என்பவரின் பெரியம்மா தங்கம்மாள் கூறும் போது, “ போதுமான மருந்துகள் இல்லை என்றும், செவிலியர்கள் முறையாக நோயாளிகளை பராமரிக்கவில்லை” என்றும் குற்றம் சாட்டினார்.

    தீ விபத்தில் காயமடைந்த ஒவ்வொரு நபர்களையும் தனித்தனியாக சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து கூறியதாவது:-



    கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 நபர்களும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 10 நபர்களும் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீக்காயங்களுக்கான ஒப்புயர்வு மையமாக முன்னாள் முதல்வர் அம்மாவால் உருவாக்கப்பட்டு வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இம்மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் நிர்மலா தலைமையில் 12 மருத்துவர்கள் மற்றும் 35 செவிலியர்கள் கொண்ட சிறப்பு குழு 24 மணிநேரமும் காயமைடந்தவர்களை கண்காணித்து அதிதீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

    20 நபர்களில் ஒரு குழந்தை உட்பட 16 நபர்களுக்கு 40 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட 4 நபர்கள் சற்று கவலைக்கிடமாக உள்ளனர். எனினும், இவர்களை காப்பாற்றுவற்கு தேவையான அனைத்து முயற்சிகளிலும் மருத்துவக்குழு ஈடுபட்டுள்ளது.

    மேலும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 நபர்களுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலநமச்சிவாயம் தலைமையில் குழு அமைத்து 24 மணிநேரமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காயமடைந்த நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிவு கிருமி தாக்காத வண்ணம் முழுவதும் பாதுகாப்பட்டதாக மாற்றப் பட்டுள்ளது. இவர்களுக்கு தேவைப்படும் உயர்தர நோய் எதிர்ப்பு மருந்து உட்பட அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தீவிர கண்காணிப்பில் உயர் சிகிச்சை அளிக்க அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணனும் மருத்துவமனையில் முகாமிட்டு கவனித்து வருகின்றனர்.
    Next Story
    ×