search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தை முற்றுகையிட்ட 243 பேர் கைது
    X

    பெரியகுளம் அருகே ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தை முற்றுகையிட்ட 243 பேர் கைது

    பெரியகுளம் அருகே குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் 243 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு, ஊருக்கு அருகில் உள்ள வரட்டாறு பகுதியில் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அருகே முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 2 கிணறுகள் வெட்டப்பட்ட நிலையில், 3–வதாக ஒரு கிணறு வெட்டப்பட்டது.

    இதனால், குடிநீர் தேவைக்காக வெட்டப்பட்ட கிணற்றில் நீர்மட்டம் குறைந்து விட்டதாகவும், ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தில் கிணறு வெட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறி லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், கடந்த மாதம் தேனி–பெரியகுளம் சாலையில் மறியல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட கிணறு வெட்டும் பணியில் விதிமீறல் இருக்கிறதா? என்று பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஆனந்தி தலைமையில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் இணைந்து நிலம் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தில் புதிதாக கிணறு அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.

    கிணறு அமைந்துள்ள இடமும், அங்குள்ள வரட்டாறு ஓடையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்றும், அப்பகுதிகளில் உள்ள பிற கிணறுகளில் விதிமீறல்கள் உள்ளதா? என்றும் அதிகாரிகள் நிலம் அளவீடு பணிகள் மேற்கொண்டனர். இந்த அளவீடு பணிகள் தொடர்பான விவரங்கள், சமாதானக்கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சமாதானக்கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில், லட்சுமிபுரத்தை சேர்ந்த மக்கள் நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்து கிணற்றை முற்றுகையிட சென்றனர். கிணற்றை சுற்றி அமர்ந்து முற்றுகையிட்டனர். ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட கிணற்றில் தண்ணீர் இல்லை என்பதால், புதிதாக அமைக்கப்பட்ட இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். முற்றுகையிட்ட பொதுமக்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால், அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து கிணற்றை முற்றுகையிட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். ஆண்களையும், பெண்களையும் குண்டுக்கட்டாக போலீசார் தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்.

    கிணற்றை முற்றுகையிட்டது தொடர்பாக 171 பெண்கள் உள்பட 243 பேர் பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே விடுதலையாகி வந்த பொதுமக்கள் ஊரில் ஒன்றாக கூடி கூட்டம் நடத்தினர். அதில், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர். இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் இன்று சமாதானக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×