search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் ரூ.1 கோடி கறுப்பு பணம் மாற்ற முயற்சி: வருமான வரித்துறை விசாரிக்க முடிவு
    X

    திருப்பூரில் ரூ.1 கோடி கறுப்பு பணம் மாற்ற முயற்சி: வருமான வரித்துறை விசாரிக்க முடிவு

    திருப்பூரில் ரூ.1 கோடி கறுப்பு பணம் மாற்ற முயற்சி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக அந்த 3 பேரிடமும் வருமான வரித்துறையினர் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி சோளிபாளையத்தில் நேற்று முன்தினம் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். காரில் இருந்த சூட்கேசில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ரூ.1 கோடி இருந்தன. விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் நடுச்சேரி கொளத்தூரை சேர்ந்த ராமசாமி (வயது 50). இவரது கார் டிரைவர் செந்தில்குமார் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    ராமசாமி தன்னிடம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் 1 கோடி அளவுக்கு இருப்பதாகவும், அதனை மாற்ற வேண்டும் என்று கார் டிரைவரிடம் கூறினார். இதனையடுத்து கமி‌ஷன் அடிப்படையில் மாற்றுபவர்களை தனக்கு தெரியும் என்று கார் டிரைவர் செந்தில்குமார் கூறினார்.

    அதன்படி கார் டிரைவர் திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த சுலைமானிடம் இது குறித்து தெரிவித்தார். சுலைமான் தனக்கு தெரிந்த திருச்சியை சேர்ந்த கோவில் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.

    பின்னர் திருப்பூரில் உள்ள புரோக்கர் ஒருவர் கமி‌ஷன் அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தருவார் என்று கூறினார். அதன்படி ராமசாமி, கார் டிரைவர் செந்தில்குமார், திருச்சியை சேர்ந்த சுலைமான் மற்றும் கோவில் ஆகிய 4 பேரும் காரில் 1 கோடி பழைய ரூபாய் நோட்டுக்களை திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு கொண்டு வந்தனர். இதில் சென்னையை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 லட்சம் புதிய நோட்டுக்களை கொடுத்தால் ரூ.1 கோடிக்கு பழைய நோட்டுக்களை கொடுப்பதாகவும் தகவல் கிடைத்தது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    பிடிபட்ட ரூ.1 கோடி பழைய நோட்டுக்களை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தலைமறைவான கோவில் என்பவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் வருமான வரித்துறையினர் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னையில் கறுப்பு பணம் கொடுத்தவர் யார்? திருப்பூரில் மாற்றிக்கொடுக்க முயன்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
    Next Story
    ×