search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு: தாய்- ஆண் குழந்தை பலி
    X

    பொள்ளாச்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு: தாய்- ஆண் குழந்தை பலி

    பொள்ளாச்சி அருகே டெங்கு காய்ச்சலுக்கு தாயும்- குழந்தையும் பலியாகினர். இந்நிலையில் அவரது மூத்த மகனுக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தென் குமாரபாளையம் குருஞ்சேரியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). கோவில் பூசாரி. இவரது மனைவி லூர்து மேரி (24). இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 5 வயதில் ஹரிஸ் என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியான லூர்து மேரிக்கு கடந்த 3-ந்தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து கடந்த 7-ந்தேதி லூர்துமேரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்த மறுநாள் லூர்துமேரிக்கு உடல் நிலை மோசமானது. இந்த நிலையில் அவரும், ஆண் குழந்தையும் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

    அப்போது வரும் வழியிலேயே லூர்துமேரி இறந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி இறந்தது.

    இந்த நிலையில் தாயும்- ஆண் குழந்தையும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தான் இறந்துள்ளனர் என்ற தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    டெங்கு காய்ச்சலால் தான் தாய்- குழந்தை இறந்தார்களா? என்று மாவட்ட சுகாதார துறையும் விசாரணை முடுக்கி விட்டுள்ளது.

    இந்த சம்பவம் பற்றி கோமங்கலம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் திருமணமாகி 6 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே லூர்து மேரியின் மூத்த மகன் ஹரிசுக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட ஹரிஸ், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே டெங்கு காய்ச்சலுக்கு தாயும்- குழந்தையும் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகனுக்கும் டெங்கு பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பானுமதி கூறியதாவது:-

    கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லூர்துமேரிக்கு உடல் நிலை மோசமாகி உள்ளது. அப்போதே ஆபரேசன் மூலம் குழந்தை பிறந்திருந்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. ஆனால் சுக பிரசவம் காரணத்தால் மேலும் பாதிக்கப்பட்டு தாயும்- குழந்தையும் இறந்துள்ளனர்.

    இருப்பினும் தாய்- குழந்தையின் ரத்த மாதிரி பரிசோதனையின் முடிவில் தான் டெங்கு காய்ச்சலால் இறந்தார்களா? என்று தெரிய வரும். மேலும் சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு கண்காணிப்பு குழு சென்று விசாரணை நடத்தும்.

    தமிழக- கேரள எல்லையோர கிராமங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நில வேம்பு கசாயம் வழங்குதல், கொசு மருந்து அடித்தல், மற்றும் சிறப்பு டாக்டர்கள் குழுவினர் அடங்கிய மருத்துவ முகாம் நடந்து வருகிறது. பொள்ளாச்சி, திவான்புதூர், மீனாட்சிபுரம் , கணபதி காலனி உள்ளிட்ட பகுதி களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குருஞ்சேரி சுகாதார ஆய்வாளர் ஸ்ரீபாலன் கூறியதாவது:-

    தாயும்- குழந்தையும் டெங்கு காய்ச்சலால் தான் இறந்தார்களா? என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும். கடந்த ஒரு வாரமாக குருஞ்சேரி பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.

    தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதார துறையின் பணிகள் துரிதமாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×