search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர்
    X
    காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர்

    காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் மகனிடம் 15 மணி நேரம் விசாரணை

    லண்டனில் இருந்து சென்னை வந்த காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் மகனை போலீசார் விமான நிலையத்தில் இருந்து விசாரணைக்காக காஞ்சீபுரத்துக்கு அழைத்து வந்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், பிரபல ரவுடி. இவர் மீது கொலை, ஆள் கடத்தல், மிரட்டி நிலம் அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட உடன் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு ரவுடி ஸ்ரீதர் வெளிநாடு தப்பிச்சென்று விட்டார். அவர் துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ரவுடி ஸ்ரீதருக்கு குமாரி என்ற மனைவியும், சந்தோஷ் குமார் என்ற மகனும், 2 மகளும் உள்ளனர். இவர்களில் சந்தோஷ்குமார் லண்டனில் பி.பி.ஏ. படித்து வந்தார். குமாரியும் அவரது 2 மகளும் காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார்கள்.

    ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட் டில் இருந்து இந்தியாவுக்கு வந்தால் தகவல் தெரிவிக்கு மாறு அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் லண்டனில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திருப்பதாக நேற்று அதிகாலை காஞ்சீபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து காஞ்சீபுரம் போலீசார் விரைந்து சென்று விமான நிலையத்தில் இருந்த சந்தோஷ்குமாரை விசாரணைக்காக காஞ்சீபுரத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    ஸ்ரீதர் தற்போது எங்கே உள்ளார்? அவரது நடவடிக்கை என்ன? எங்கெங்கு சொத்துகள் உள்ளன? என்று துருவித்துருவி விசாரணை நடத்தினர். சுமார் 15 மணி நேர விசாரணைக்கு பின்னர் நேற்று நள்ளிரவு சந்தோஷ் குமாரை போலீசார் விடுவித்தனர்.

    மேலும் எப்போது அழைத்தாலும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதரின் மனைவி குமாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். தற்போது அவரது மகனிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சட்டவிரோதமாக வாங்கிய சொத்துக்கள் அனைத்தையும் ஸ்ரீதர் அவரது மனைவி குமாரி மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்கி வைத்திருந்தார். சுமார் ரூ. 100 கோடிக்கு மேலான சொத்துக்களை அமலாக்கப்பிரிவினர் ஏற்கனவே முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×