search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியமன எம்.எல்.ஏ. பிரச்சினை: புதுவை கவர்னருக்கு எதிராக போஸ்டர் ஒட்ட போலீஸ் தடை
    X

    நியமன எம்.எல்.ஏ. பிரச்சினை: புதுவை கவர்னருக்கு எதிராக போஸ்டர் ஒட்ட போலீஸ் தடை

    புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் அறிவிப்பு வந்ததுமே கவர்னர் மீது கோபம் அடைந்த கட்சிகள் கவர்னரை விமர்சித்து போஸ்டர்களை ஒட்டின. கவர்னருக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதற்கு போலீசார் திடீர் தடை விதித்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல். ஏ.க்களாக நியமிக்க கவர்னர் கிரண்பேடி சிபாரிசு செய்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அவருக்கு எதிராக பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

    3 எம்.எல்.ஏ.க்கள் நியமன அறிவிப்பு வந்ததுமே கவர்னர் மீது கோபம் அடைந்த கட்சிகளும், அமைப்புகளும் கவர்னரை விமர்சித்து புதுவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டின.

    புதுவையில் எதற்கெடுத்தாலும் போஸ்டர்கள் ஒட்டுவது என்பது சாதாரண வி‌ஷயமாகவே இருந்தது. ஆனால், கவர்னருக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதற்கு போலீசார் திடீர் தடை விதித்துள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவும், நேற்று இரவும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போஸ்டர்களை அச்சிட்டு அவற்றை ஒட்டினார்கள். அவர்களை போலீசார் தடுத்ததுடன் போஸ்டர்களையும் பறித்து சென்றனர்.

    இதையும் மீறி ஒட்டினால் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.

    இது சம்பந்தமாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில், போஸ்டர்கள் ஒட்டுவதற்கு ஏற்கனவே தடை உள்ளது. எனவே, போஸ்டர் ஒட்டுவதை தடுப்பதோடு அதை கண்காணித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    புதுவையில் போலீஸ் துறை முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் உள்ளது. தற்போது கவர்னருக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் நாராயணசாமிக்கு சாதகமாகவே நடத்தப்படுகின்றன. ஆனாலும், போலீஸ் துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×