search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் பா.ஜ.க.வினருக்கு எம்.எல்.ஏ. பதவி: எதையும் கண்டு கொள்ளாத காங்கிரஸ் - தொண்டர்கள் அதிர்ச்சி
    X

    புதுவையில் பா.ஜ.க.வினருக்கு எம்.எல்.ஏ. பதவி: எதையும் கண்டு கொள்ளாத காங்கிரஸ் - தொண்டர்கள் அதிர்ச்சி

    பா.ஜ.க.வினருக்கு எம்.எல்.ஏ. பதவி விவகாரம் தொடர்பாக எதையுமே கண்டுகொள்ளாமல் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மவுனமாக இருப்பது புதுவை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.

    மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் அந்த கட்சி அதிக இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் குறைவான இடங்களை பெற்றிருந்த பாரதிய ஜனதா அந்த இரு மாநிலங்களிலும் மற்றகட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்தது.

    காங்கிரஸ் மேலிடம இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சி அமைப்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ளாததால் தான் ஆட்சி கைவிட்டு போனதாக இரு மாநில காங்கிரஸ்காரர்கள் கட்சி மேலிடத்தலைவர்கள் மீது குற்றம் சாட்டினார்கள்.

    இதேபோலத்தான் இப்போது கட்சி மேலிடம் மீது புதுவை காங்கிரசார் குற்றம்சாட்டும் நிலையும் ஏற்பட்டுள்ளது. புதுவையில் கவர்னர் கிரண்பேடி புதுவை அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவது குறித்து கட்சி மேலிடத்திடம் புதுவை காங்கிரசார் புகார் தெரிவித்தனர்.

    ஆனால் இதுசம்மந்தமாக டெல்லி மட்டத்தில் காங்கிரஸ் கட்சி எந்த எதிர்ப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் பாராளுமன்றத்தில் கூட இதுபற்றி பேசவில்லை.

    தன்னிச்சையாக பாரதிய ஜனதா கட்சியினர் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க மத்திய அரசு முயற்சி எடுக்கிறது என்ற தகவல் தெரிந்ததும் அதுபற்றி கட்சி மேலிடத்திடம் புகார் கூறினார்கள். இதை தடுக்கவும் டெல்லி மட்டத்தில் அவர்கள் முயற்சி செய்யவில்லை.

    பின்னர் பா.ஜ.க.வினர் 3 பேரையும் எம்.எல்.ஏ.க்களாக நியமித்து முறைப்படி அறிவிப்பு வெளிவந்தது. இது புதுவை காங்கிரசார் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுசம்மந்தமாக கட்சி மேலிடத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    மத்திய அரசு இந்த வி‌ஷயத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இது பாரதிய ஜனதா கட்சிக்கே அகில இந்திய அளவில் கெட்டப்பெயரை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதைக்கூட கட்சி மேலிடத்தலைவர்களுக்கு அரசியலாக்க தெரியவில்லை என்று புதுவை காங்கிரசார் கூறுகின்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு 2 நாட்கள் ஆகியும் கூட டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியோ, துணைத்தலைவர் ராகுல்காந்தியோ, மேலிட தலைவர்களோ, செய்தி தொடர்பாளர்களோ எந்த கருத்தையும் கூறவில்லை.பாரதிய ஜனதாவுக்கு எதிரான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    இப்படி எதையுமே கண்டுகொள்ளாமல் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மவுனமாக இருப்பது புதுவை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலத்தில் மத்திய அரசு இடையூறு செய்வதைக்கூட தட்டிக்கேட்க முடியாமல் கட்சி மேலிடம் இருப்பது அவர்களை வேதனையடைய செய்துள்ளது.

    Next Story
    ×