search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதானவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டம்
    X

    கைதானவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டம்

    கைதானவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு ஒத்துழைப்போம் என கதிராமங்கலம் பொதுமக்கள் திட்டவட்டமாக கூறி உள்ளனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.



    கடந்த 30-ந் தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து போராட்ட்தில் ஈடுபட்டனர்.

    அப்போது எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டிருந்த பகுதியில் போடப்பட்டிருந்த முள் செடிக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராடிய மக்களை சந்திக்க சென்ற காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் உள்பட 6 பேரையும் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தை சேர்ந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.நேற்று 3-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாணவர்களும் பள்ளிக்கு செல்லாமல் வாயில் கருப்பு துணி கட்டி அமைதி ஊர்வலம் சென்றனர். இதில் பெண்களும் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவு சீரமைக்கும் பணி நடைபெற்றது. உடைந்த குழாயை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி விட்டு புதிய குழாயை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் அமைத்தனர்.

    கதிராமங்கலத்தில் தற்போது இயல்பான நிலை நிலவுவதால் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி. ஆழ்துளை கிணறுகள் உள்ள இடங்களில் மட்டும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் இன்று கடைகள் திறக்கப்பட்டது. காலையில் டீக்கடைகள் திறந்து இருந்தது. இதற்கிடையில் திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் கதிராமங்கலம் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்கள் இதில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்து உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, கதிராமங்கலம் மக்களுக்காக போராடிய 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். அவர்களை எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்தால்தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம். அதுவரை பேச்சு வார்த்தை கிடையாது. எங்கள் போராட்டம் அமைதியான முறையில் தொடரும் என்றனர்.
    Next Story
    ×