search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரக்கு-சேவை வரியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்
    X

    சரக்கு-சேவை வரியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

    லாரி உதிரிபாகங்கள் மற்றும் ஆயிலுக்கான சரக்கு, சேவை வரியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    நாமக்கல்

    இந்தியா முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்து உள்ளது. இதன்படி லாரி உதிரிபாகங்கள், டயர் மற்றும் ஆயிலுக்கான வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது லாரி உரிமையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வரி விதிப்பு குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

    லாரி உதிரிபாகங்களுக்கு ஏற்கனவே 14.5 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அது ஜி.எஸ்.டி.யில் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் லாரி உதிரிபாகங்களின் விலை உயரும்.

    ஏற்கனவே ஆயிலுக்கு 18 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அதுவும் 28 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இதேபோல் லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் டயர்களுக்கு ஏற்கனவே 14.5 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஜி.எஸ்.டி.யால் டயருக்கான வரியும் 28 சதவீதமாக உயர்ந்து உள்ளது.



    இதனால் ஆயில் மற்றும் டயருக்கான விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே லாரி தொழில் நலிவடைந்து வரும் வேளையில் உதிரிபாகம், டயர் மற்றும் ஆயில் போன்றவை விலை உயர்ந்தால் மேலும் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு லாரிகளுக்கான உதிரிபாகம், டயர் மற்றும் ஆயில் போன்றவற்றிற்கான வரியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும்.

    பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் 50 சதவீதத்திற்கும் மேல் வரி வசூல் செய்து வருகின்றன. இவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் அதிகபட்சமாக 28 சதவீதம் மட்டுமே வரி விதிக்க முடியும். அதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை குறையும். நலிவடைந்த லாரி தொழில் சற்று முன்னேற்றம் காணும்.

    ஜி.எஸ்.டி.யால் வணிக வரித்துறைக்கு சொந்தமான சோதனை சாவடிகள் மூடப்பட்டு உள்ளன. இதற்கு சம்மேளனம் சார்பில் வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×