search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு: பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3½ அடி உயர்வு
    X

    குமரியில் மழை நீடிப்பு: பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3½ அடி உயர்வு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3½ அடி அதிகரித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இப்போதுதான் தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. குலசேகரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திருவரம்பு, திற்பரப்பு, திருவட்டார், மாத்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    இன்று காலையிலும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தபடி இருந்தது. அதே நேரம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நாகர்கோவில், சுசீந்திரம், சாமித்தோப்பு, கன்னியாகுமரி பகுதிகளில் லேசான சாரல் மழையே பெய்தது.

    மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்கிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பெருஞ்சாணி, சிற்றாறு மற்றும் மாம்பழத்துறையாறு அணைகளுக்கும் கணிசமான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இன்றும் மழை நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று 31.40 அடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 34.90 அடியாக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் நீர்மட்டம் 3½ அடி அதிகரித்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1139 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 16 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1118 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படாததால் இங்கும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 2.20 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 41 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 2.29 அடியாக உள்ளது. இங்கும் வினாடிக்கு 83 கனஅடி தண்ணீர் வருகிறது.

    குமரி மாவட்டத்தின் மலை கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    உள்ளூர் பயணிகளும், வெளியூர் சுற்றுலா பயணிகளும் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். இன்று காலையிலும் இப்பகுதியில் இதமான சீதோ‌ஷணம் நிலவியது.

    குமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பாலமோரில் அதிகபட்சமாக 60.8 மி.மீ. மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-30.2, பெருஞ்சாணி-31.2, சிற்றாறு-1-37, சிற்றாறு-2-26, ஆரல்வாய்மொழி-17.4, மாம்பழத்துறையாறு-42, நிலப்பாறை-22, இரணியல்-13.3, ஆணைக்கிடங்கு-28, குளச்சல்-46.4, திற்பரப்பு-17.4, நாகர்கோவில்-32, பூதப்பாண்டி-26, சுருளோடு-38.4, கன்னிமார்-33.5, மயிலாடி-28.6, கொட்டாரம்-20.2, புத்தன் அணை-30.8, கோழிப்போர்விளை-18.5, முள்ளங்கினா விளை-37.
    Next Story
    ×