search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நள்ளிரவில் மண்டபத்தை காலி செய்து திருமண கோஷ்டி ஓட்டம்
    X

    நள்ளிரவில் மண்டபத்தை காலி செய்து திருமண கோஷ்டி ஓட்டம்

    காட்பாடியில் சிறுமிக்கு திருமணம் செய்ய முயற்சித்த கும்பல் மண்டபத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கணேஷ் (வயது25). இவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தடபுடலாக ஏற்பாடு செய்தனர்.

    கழிஞ்சூர் திரவுபதியம்மன் கோவில் அருகே உள்ள ராதாகிருஷ்ணா திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

    நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. இரு வீட்டார் உறவினர்களும் மண்டபத்தில் திரண்டனர். இந்த நிலையில் சிறுமி திருமணம் குறித்து தாசில்தார் ஜெகதீஷ்வரனுக்கு அதிகாலை 3 மணிக்கு தகவல் வந்தது.

    தாசில்தார் ஜெகதீஷ்வரன் வருவாய் அலுவலர் சந்தோஷ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    இதையறிந்த திருமண கோஷ்டியினர் மணமக்களுடன் மண்டபத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர். அதிகாரிகள் சென்ற போது மண்டபம் வெறிச்சோடி கிடந்தது. மண்டபத்தில் டிபன் செய்து கொண்டிந்த சமையல் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மண்டபத்தில் இருந்த அனைவரும் மணமக்களுடன் சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் விசாரணையில் சிறுமிக்கு திருமணம் செய்ய முயன்றது உறுதியானது. கட்டாயம் திருமணம் நடத்த வேண்டும் என்ற முனைப்பில் திருமண கோஷ்டியினர் தப்பி சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் சிறுமியின் வீடு உள்ள சித்தூர் மாவட்டம் கொத்தூர் கிராமத்துக்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    திருமண மண்டபத்துக்கு ரூ.4 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். மேலும் பல பொருட்களை மண்டபத்தில் விட்டு சென்றுள்ளனர். கட்டாயம் அவர்கள் திருமண மண்டபத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் மண்டபத்தை கண்காணித்து வருகின்றனர். சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ன்று காலையில் திருமணத்துக்கு வந்த மாப் பிள்ளை வீட்டு உறவினர்கள், நண்பர்கள் மண்டபம் வெறி சோடி கிடந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் கழிஞ்சூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×