search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: கவர்னர் கிரண்பேடி
    X

    புதுவையை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: கவர்னர் கிரண்பேடி

    புதுவை மாநிலத்தை மத்திய அரசும், மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்களும் தீவிரமாக கண்காணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி அரசு நிர்வாகம் தொடர்பாக அவ்வப்போது கருத்துக்களை இணைய தளம் மூலமாக வெளியிட்டு வருகிறார். அதில், அரசை விமர்சித்தும் அடிக்கடி கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இன்று புதிதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தை மத்திய அரசும், மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்களும் தீவிரமாக கண்காணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இங்கு நடக்கும் நிர்வாகமும், நிதி கையாளுதலும் நேர்மையாகவும், பொறுப்புடனும், வெளிப்படைத் தன்மையாகவும் நடக்க வேண்டுமென்றால் இந்த கண்காணிப்பு அவசியம்.

    தற்போது புதுவையை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்த்துள்ளனர். இதனால் இங்கு அதிக அளவில் நிதி வரும். ஏராளமான வளர்ச்சி பணிகள் நடைபெறும். அவற்றை கண்காணிக்க வேண்டுமென்றால் டெல்லி பூகோள ரீதியாக வெகுதூரத்தில் உள்ளது. எனவே, மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

    மத்திய தணிக்கை அறிக்கையில் நிதி இழப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டும்.

    மக்களுக்கு சென்றடைய வேண்டியவை முறையாக செல்ல வேண்டும். பதவி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மீதும், அரசியல்வாதிகள் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    புதுவையில் நடக்கும் பணிகளை மத்திய அரசு ஆண்டு மத்தியில் இடையிடையே கண்காணிக்க வேண்டும். சமூக தணிக்கை மூலமும், ஆய்வு மூலமும் இதை கண்காணித்தால் தான் உரிய நேரத்தில் முன்கூட்டியே பாதிப்பை தடுக்க முடியும். அதிகாரிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பலர் சுய நலத்துக்காக தவறு செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களை கண்காணிப்பது அவசியம்.

    புதுவை மக்கள் பல வகைகளில் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்தி அவர்களை காப்பாற்ற வேண்டும். புதிய தலைமுறை தலைவர்களை உருவாக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய தலைவர்கள் அந்த பதவிகளுக்கு வரவேண்டும்.

    புதுவையில் சிறந்த நிர்வாகமும், நேர்மையான நிதி கையாளுதலும் நடைபெற உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. புதுவையில் குறைந்த அளவே வளங்கள் உள்ளன. அவை காப்பாற்றப்பட வேண்டும்.

    இன்றைய சூழ்நிலையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. கிரிமினல் தவறுகளும், அலட்சியமான நிர்வாகமும் புதுவை மக்களுக்கு பல்வேறு வலியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதுடன் அவர்களை ஏமாற்றவும் செய்துள்ளது. இதை தடுத்து நிறுத்த முறையான அமைப்பும், கண்காணிப்பும், விசாரணையும், புலனாய்வும், நீதியும் தேவைப்படுகிறது.

    தவறு செய்தால் கண்டு பிடித்து விடுவார்கள். மாட்டிக்கொள்வோம் என்ற ஒரு பயத்தை உருவாக்கும் நிலை ஏற்பட வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார்.
    Next Story
    ×