search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.1 கோடி வரை லஞ்சம்: டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-1 தேர்வில் முறைகேடு - ராமதாஸ் குற்றச்சாட்டு
    X

    ரூ.1 கோடி வரை லஞ்சம்: டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-1 தேர்வில் முறைகேடு - ராமதாஸ் குற்றச்சாட்டு

    ரூ.1 கோடி வரை லஞ்சம், டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-1 தேர்வில் முறைகேடு என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 19 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 21 வணிக வரித்துறை உதவி ஆணையர்கள், 8 மாவட்டப் பதிவாளர்கள் என 74 முதல் தொகுதி பதவிகளுக்கான முதனிலைத் தேர்வுகள் 2015ஆம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி நடத்தப்பட்டன. அத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு கடந்த ஆண்டு ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.

    அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட 11 பேரில் முனைவர் ராஜாராம், முனைவர் கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன், சுப்பையா, பாலுச்சாமி ஆகிய ஐவரும் ஏப்ரல் 21-ஆம் தேதி மீண்டும் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

    அடுத்த இரு வாரங்களில் அதாவது மே மாதம் 5ஆம் தேதி தேர்வாணையத்தின் தலைவர் அருள்மொழி திடீரென இரு மாத விடுப்பில் செல்கிறார். அவர் விடுப்பில் சென்ற ஒரு வாரத்தில், அதாவது மே 12-ஆம் தேதி முதல் தொகுதி பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் அவசர அவசரமாக வெளியிடப்படுகின்றன.

    முதன்மைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 148 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் பெரும்பான்மையானோர் தகுதி இல்லாதவர்கள் என்றும், முதன்மைத் தேர்வு முடிவுகளில் ஊழல்கள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர்களாக உள்ள சிலரும், போட்டித்தேர்வு பயிற்சி மையம் நடத்தும் சிலரும் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்த முறைகேட்டை செய்துள்ளனர். தகுதியும், திறமையும் இல்லாத சிலரின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டிருக்கிறது.

    இதற்காக சிலரிடமிருந்து ரூ.1 கோடி வரை கையூட்டு பெறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    நேர்காணலில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்கான பேரங்களும் நடை பெற்று வருவதாகவும், இதற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதன் பின்னணியில் மிகப் பெரிய சதித்திட்டம் இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.எனவே, முதல் தொகுதி பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை ரத்து செய்துவிட்டு, அதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    Next Story
    ×