search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்
    X

    திருவண்ணாமலை கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அவர் கோ பூஜை செய்து வழிபட்டார்.
    திருவண்ணாமலை:

    பா.ஜ.க. அகில இந்திய தலைவர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் வந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் நேற்று காலை புதுவை அருகில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் மாத்ரி மந்திர் தியான கூடத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு தியான கூடத்தை சுற்றி பார்த்த அவர் 40 நிமிடம் தியானம் செய்தார்.

    பின்பு, தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலைக்கு புறப்பட்ட அவர் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் வந்திறங்கினார்.

    அமித்ஷாவை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

    இதையடுத்து, காரில் அருணாசலேஸ்வரர் கோவில் அருகே செங்கம் ரோடு கிரிவல பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்துக்கு சென்ற அவர் சிறிது நேரம் தியானம் செய்தார்.

    பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று நந்தீஸ்வரர் முன்பு கோ பூஜை செய்தார். பின்னர் அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து வழிபட்டார்.

    முன்னதாக கோவில் நிர்வாகம் மற்றும் இந்து முன்னணி, பா.ஜ.க. சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அமித்ஷாவுடன் தேசிய செயலாளர்கள் முரளிதர்ராவ், எச்.ராஜா, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை கோவில் பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    முன்னதாக அமித்ஷாவை வரவேற்க முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க. எம்.பி. வனரோஜா, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்கு வந்தார்.

    அப்போது போலீசார் “வரவேற்பாளர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை” எனக்கூறி வனரோஜா எம்.பி.க்கு அனுமதி மறுத்தனர். இதனால் அவர் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் சமரசம் செய்து அவரை கல்லூரிக்குள் அனுமதித்தனர்.
    Next Story
    ×