search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 76-வது நாளாக நூதன போராட்டம்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 76-வது நாளாக நூதன போராட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல் பொதுமக்கள் 76-வது நாளாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடகாடு:

    வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல் பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-வது கட்ட போராட்டத்தை தொடங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 76-வது நாளாக நேற்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், போராடி வரும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்கும்போது, அதில் இருந்து வெளியேறும் கழிவுகளை தெர்மகோல் போட்டு மூடுவதுபோல சித்தரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நிருபர்களிடம் கூறுகையில்,

    பல மாதங்களாக போராடி வரும் எங்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால், அதிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளால் பெரும் சுகாதாரகேடு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும். இதை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தும் விதமாக, ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்கும்போது அதிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளை தெர்மகோல் போட்டு மூடும் போராட்டத்தை நடத்தினோம். திட்டத்தை ரத்து செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டோம். அதனால், திட்டத்தை உடனே ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.
    Next Story
    ×