search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி அருகே நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கி வாலிபர் பலி
    X

    கோத்தகிரி அருகே நீர்வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கி வாலிபர் பலி

    கோத்தகிரி அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர் நீர் வீழ்ச்சி தடாகத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் என்கிற கோபால். இவரது மகன் சருண் என்கிற சர்னேஷ் (வயது 25). இவர் டிப்ளமோ படித்து, கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் மதபோதகராகவும் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறையானதால், தனது நண்பர்களுடன் அவர் நேற்று முன்தினம் ஓரசோலையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை சர்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அரவேணு அருகிலுள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சியை காண சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு செல்லும் தண்ணீர் தேங்கியுள்ள தடாகத்தின் பகுதியை பார்த்ததும் அதில் குளிக்கச் சென்றுள்ளனர்.

    இதில் எதிர்பாராதவிதமாக கால் தவறி சர்னேஷ் அந்த தடாகத்தில் தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்க தொடங்கினார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கோத்தகிரி போலீஸ் நிலையத்தும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு நிலையை வீரர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பாகவே அந்த பகுதி பொதுமக்கள் ஊர்த்தலைவர் சுப்பிரமணி தலைமையில் சர்னேஷின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எச்சரிக்கை பலகைகள்

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:– கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து வந்த கல்லூரி மாணவர் ஒருவரும், இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்று உயிரிழந்தார். இது போன்ற சம்பவங்கள் இங்கு அடிக்கடி நடைப்பெற்று வருகிறது. ஆகவே கேத்தரின் நீர்விழ்ச்சி பகுதியில் உள்ள காட்சிமுனை அருகே பழுதடைந்த குழாய் கம்பிகளை மாற்றி பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். சுற்றுலாப்பயணிகள் ஆபத்தான பகுதிகளில் குளிக்க சென்று உயிரிழந்து விடுவதை தடுக்க எச்சரிக்கை பலகைகளை வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×