search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா விற்பனை: அமைச்சர்-அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வற்புறுத்தல்
    X

    குட்கா விற்பனை: அமைச்சர்-அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வற்புறுத்தல்

    குட்கா விற்பனையை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை விசாரணையில் தெரியவந்த உண்மை குறித்து தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தமிழக அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

    கடந்த ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் செயல்பட்டு வந்த எம்.டி.எம் குட்கா ஆலைகளில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில், போதைப் பாக்கு விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. அவற்றின் அடிப்படையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற் கொள்ளும்படி தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு வருமானவரித் துறை முதன்மை ஆணையர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி எழுதியிருந்தார். அதன்பின்னர் ஓராண்டு நிறைவடையவிருக்கும் நிலையில் அதன் மீது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    சுகாதாரத்துறை அமைச்சர், தமிழகக் காவல்துறை உயரதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு மாதாமாதம் கையூட்டு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. குட்கா ஆலையின் ஒரே ஒரு பங்குதாரரிடம் இருந்து, ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு பல கோடிகள், சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு ரூ.60 லட்சம் உட்பட மொத்தம் ரூ.40 கோடி கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

    இதை வருமானவரித்துறை விசாரணையின் போது குட்கா ஆலையின் பங்கு தாரரான மாதவராவ் ஒப்புக்கொண்டிருக்கிறார். அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மாதா மாதம் கையூட்டு வழங்கியது தவிர தீபஒளி, கிறித்துமஸ் போன்ற திருநாள்களுக்கும் கையூட்டு கொடுத்து வந்திருப்பதாக குட்கா நிறுவனங்களின் அதிகாரிகள் வருமான வரித்துறையிடம் கூறியுள்ளனர்.

    இந்தக் கணக்குகள் அனைத்தும் குட்கா என்ற ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது தான். இது தவிர சென்னை செங்குன்றத்தில் ஏராளமான குட்கா ஆலைகள் செயல்பட்டு வந்தன. சுகாதார அமைச்சரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 4 குட்கா ஆலைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தன. இந்த ஆலைகளில் இருந்து மட்டும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு மாதம் ரூ.6 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இவ்வளவுக்கு பிறகும் இந்த குற்றச்சாற்றுகள் குறித்து தமிழக அரசு இதுவரை எந்த விசாரணைக்கும் ஆணையிடவில்லை.

    இதுதவிர சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க பெயரளவில் விசாரணைக்கு ஆணையிடப்பட்ட போதிலும், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

    சேகர் ரெட்டியின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் போது கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் அதிகாரிகளுக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கையூட்டாக கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ராதா கிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தது தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளை காப்பாற்றும் பணியை மட்டுமே செய்து வருகிறது.

    எனவே குட்கா ஊழல், மணல் ஊழல் ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தியதில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய ரூபாய் 40 கோடி லஞ்சம் அமைச்சர்களுக்கும், காவல் துறையினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக ஆதாரத்தோடு செய்தி வெளி வந்துள்ளன.

    இதுகுறித்து வருமான வரித்துறை தலைமை இயக்குநர் பாலகிருஷ்ணன் ஒரு வருடத்திற்கு முன்பு தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை, எந்த நடவடிக்கையும் இல்லை. ஏனெனில் இதில் கூட்டு சதி செய்த அன்றைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டிலேயே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை செய்து சிக்கிக் கொண்டதை அனைவரும் அறிவார்கள்.

    ஊழலின் உறைவிடமாக இருக்கிற அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக குட்கா, பான் மசாலா ஊழல் இன்றைக்கு ஆதாரத்தோடு வெளிவந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் யார் ? காவல் துறை அதிகாரிகள் யார் ? இவற்றையெல்லாம் உடனடியாக வெளியே கொண்டு வருகிற பொறுப்பு மத்திய வருமான வரித்துறைக்கு இருக்கிறது. வருமான வரித்துறை பா.ஜ.க.வின் இசைவுக்கு ஏற்றாற் போல் செயல் படாமல் சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில் குற்றத்திற்கு துணை போகிற கொடிய குற்றத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×