search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோவில்லில் அமித்ஷா தியானம்
    X

    ஆரோவில்லில் அமித்ஷா தியானம்

    இன்று காலை 8.35 மணிக்கு அமித்ஷா புதுவை அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லுக்கு சென்றார். அங்கு ஆரோவில்லை சுற்றி பார்த்த அமித்ஷா பின்னர் அங்குள்ள தியான கூடத்தில் (மாத்தீர்மந்திர்) தியானம் செய்தார்.

    புதுச்சேரி:

    பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா கட்சி வளர்ச்சி பயணமாக 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுவை வந்தார். ஜிப்மர் விருந்தினர் விடுதியில் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் செண்பகா ஓட்டலில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடனும், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு ஜிப்மர் விருந்தினர் விடுதியில் தங்கினார்.

    இன்றுகாலை 8.35 மணிக்கு அமித்ஷா புதுவை அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லுக்கு சென்றார். அவருடன் புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் உடன் சென்றார்.அங்கு ஆரோவில்லை சுற்றி பார்த்த அமித்ஷா பின்னர் அங்குள்ள தியான கூடத்தில் (மாத்தீர்மந்திர்) தியானம் செய்தார். இதன்பின்னர் அவர் 9.30 மணிக்கு லாஸ்பேட்டை விமான தளத்துக்கு வந்தார்.அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை சென்றார்.

    முன்னதாக நேற்று இரவு ஆனந்தா இன் ஓட்டலில் தொழில் அதிபர்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு 106 திட்டங்களை ஏழை மக்களுக்காக கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது. வரும் 2018-ம் ஆண்டு மே மாதத்துக்குள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்து தரப்படும். மீதியுள்ள 2 ஆண்டுகளில் உலகில் தலைசிறந்த நாடுகள் வரிசையில் இந்தியா இருக்கும்.

    புதுவைக்கு மிகப்பெரிய திட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டியை அண்மையில் அறிவித்துள்ளோம். மத்திய அரசின் ஆதரவோடு ரூ. 1850 கோடியில் இத்திட்டம் நடைமுறையில் வர உள்ளது. அதேபோல் புதுவையில் 1.25 லட்சம் வங்கி கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

    புதுவையில் 2516 கழிவறைகள் கட்டி தரப்பட்டுள்ளது. ஆறரை லட்சம் எல்இடி பல்புகள் தரப்பட்டுள்ளது. 65000 மக்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அம்ருத் திட்டத்தில் ரூ. 130 கோடி தரப்பட்டுள்ளது. மின்இணைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 400 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அமைச்சராக நாராயணசாமி இருந்தபோது கூட புதுவை மாநிலத்துக்கு தேவையான நிதியை அவர் பெற்று தரவில்லை. ஆனால், கடந்த 3 ஆண்டு கால மத்திய பா.ஜ.க. ஆட்சியில் 613 சத நிதியை புதுவைக்கு அதிகரித்துள்ளோம். புதுவை அரசு மீது குற்றச்சாட்டு ஏதும் சொல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் என்வாழ்நாளில் இதுபோன்ற மோசமான ஊழல் நிறைந்த அரசை நான் பார்த்ததில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது “புதுவை மாநிலத்தை முன்னேற்ற அனைவரும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். சிங்கப்பூரை மிஞ்சும் வகையில் புதுவையையும் முன்னேற்ற நாங்கள் துணைநிற்போம். அதற்கு இங்குள்ளவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்றார்.

    Next Story
    ×