search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி வேட்பாளருக்கு முதல்வர் ஆதரவு: தம்பித்துரை விளக்கம்
    X

    ஜனாதிபதி வேட்பாளருக்கு முதல்வர் ஆதரவு: தம்பித்துரை விளக்கம்

    தலைமை கழக அனுமதியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார் என்று தம்பித்துரை விளக்கம் அளித்துள்ளார்.
    கரூர்:

    அ.தி.மு.க. அம்மா அணியின் சிறுபான்மை பிரிவு சார்பில் கரூர் ஈத்கா பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது இப்ராகிம் தலைமை தாங்கினார். ஈத்கா பள்ளிவாசல் தலைவர் நாசகர் அலி முன்னிலை வகித்தார்.

    இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, கீதா எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல்அமீது, மீனவர் அணி செயலாளர் சுதாகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் தம்பித்துரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் பிளவு என்பதே இல்லை. கருத்துவேறுபாடு மட்டுமே உள்ளது. நாங்கள் பிரிந்து இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவு தர முடிவெடுத்துள்ளோம்.
    அம்மா அணியின் எம்.பி.க்கள் அருண்மொழி தேவன், ஹரி, காட்டு மன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. முருகுமாறன் ஆகியோர் உங்கள் (தம்பிதுரை) மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்ளே? என்ற கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது என பதிலளித்தார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அனுமதியுடன்தான் ஜனாதிபதி வேட்பாளருக்கு முதல்வர் ஆதரவு தெரிவித்தாரா? என்ற கேள்விக்கு, தலைமை கழக அனுமதியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார் என விளக்கம் அளித்தார்.

    மேலும் அவர் கூறும் போது,  அ.தி.மு.க. ஒரே அணியாக தான் உள்ளது. தலைமை கழகத்தில் நான் ஒரு தொண்டனாக இருந்து அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இரட்டை இலை சின்னத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சின்னத்தை காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.
    Next Story
    ×