search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர் மட்டம் 21.84 அடியாக சரிவு
    X

    மேட்டூர் அணை நீர் மட்டம் 21.84 அடியாக சரிவு

    தென் மேற்கு பருவ மழை சரியாக பெய்யாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 21 நாட்களில் படிப்படியாக சரிந்து இன்று 21.84 அடியாக குறைந்தது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணை பாசனம் மூலம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்தாலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் சரிந்தது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் குறுவை சாகுபடிகள் முற்றிலும் பாதித்தது.

    பின்னர் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் இறுதியில் பெய்த கோடை மழையால் 6 மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த மாதம் 28-ந் தேதி 4,169 கன அடியாக அதிகரித்தது.

    இதனால் மேட்டூர் அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து கடந்த 5-ந் தேதி 24.13 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை பெய்யும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்த ஆண்டு விவசாய பணிகளை தொடங்கலாம் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை சரியாக பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் சரிந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 146 கன அடியாக இருந்தது. இன்று சற்று உயர்ந்து 153 கன அடியானது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை விட அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    இதனால் கடந்த 5-ந் தேதி 24.13 கன அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 21 நாட்களில் படிப்படியாக சரிந்து இன்று 21.84 அடியானது.இதனால் 20 நாட்களில் மட்டும் அணையில் இரண்டரை அடி நீர் மட்டம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இனி வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது தென் மேற்கு பருவ மழை கைகொடுக்குமா? சாகுபடி பணிகளை தொடங்கலாமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
    Next Story
    ×