search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்
    X

    குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்தது. மழையின் வேகம் அதிகரித்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 8.30 மணிக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.

    நாகர்கோவிலில் நேற்று மாலை முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. இரவு 9 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இடை விடாது கொட்டியது. இன்று காலையிலும் கனமழை பெய்தது. இதனால் கோட்டார், செட்டிகுளம், மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சூறைக்காற்றும் வீசியதால் ஒருசில பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அதை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    குலசேகரம், குளச்சல், அருமனை, குழித்துறை, பூதப்பாண்டி, ராஜாக்கமங்கலம், சுருளோடு, கொட்டாரம், மைலாடி, இரணியல், கோழிப்போர்விளை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் இரவு இதமான குளிர்காற்று வீசியது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கன மழை கொட்டித் தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையினால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிபட்சமாக 64.8 மில்லிமீட்டர் மழை பதிவானது.

    திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலை மேக மூட்டங்கள் திரண்டு இருந்தது. நேரம் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. இதனால் சூரிய உதயம் காண வந்த சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து தொடங்கி நடந்து வந்தது. மழையின் வேகம் அதிகரித்ததால் 8.30 மணிக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மழை குறைந்த பின்னர் படகு மீண்டும் இயக்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 14.15 அடியாக இருந்தது. அணைக்கு 94 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக இருந்தது. அணைக்கு 42 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

    கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையை உடனே திறந்துவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 19, பெருஞ்சாணி 19.2, சிற்றாறு-117.2, சிற்றாறு-2 16.4, மாம்பழத்துறையாறு 27, நிலப்பாறை 29.2, இரணியல் 43.2, ஆனைக்கிடங்கு 27, குளச்சல் 38.4, அடையாமடை 32, கோழிப்போர்விளை 40, முள்ளங்கினாவிளை 42, கன்னிமார் 11.2, ஆரல் வாய்மொழி 14.2, பாலமோர் 64.8, மைலாடி 33.2, கொட்டாரம் 31.4, புத்தன் அணை 20, நாகர்கோவில் 32.2, பூதப்பாண்டி 18, சுருளோடு 41.6.


    Next Story
    ×