search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்பாறை பகுதியில் விடிய விடிய கனமழை: சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு
    X

    வால்பாறை பகுதியில் விடிய விடிய கனமழை: சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு

    வால்பாறை பகுதியில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் ஒரே நாளில் சோலையார் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.
    வால்பாறை:

    வால்பாறை பகுதி முழுவதும் கடந்த 3 நாட் களாக அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் முதல் இரவு- பகலாக வால்பாறை பகுதி முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

    இந்த மழை காரணமாக ஒரே நாளில் சோலையார் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. இந்த மழை காரணமாக நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு, சோலையார் சுங்கம் ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து ஆறுகளுக்கு தண்ணீர்வரத்து ஏற்பட்டுள்ளது.இதனால் வால்பாறை நகர் பகுதியில் வாழைத் தோட்டம், சிறுவர் பூங்கா குடியிருப்பு பகுதி களை ஒட்டிச் செல்லும் வாழைத் தோட்டம் ஆற்றிலும் தண்ணீர்வரத்து ஏற்பட்டு வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் சோலையார் அணையில் 65 மிமீ மழையும், வால்பாறையில் 52 மிமீ மழையும், நீராரில் 42 மிமீ மழையும், சின்னக் கல்லாரில் 58 மிமீ மழையும் பெய்துள்ளது, சோலையார் அணைக்கு வினாடிக்கு 1030.67 கனஅடித் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அணையின் நீர்மட்டம் 48.38 அடியாக உயர்ந்துள்ளது. இந்த மழை காரணமாக வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

    கூழாங்கல் ஆற்று பகுதியில் நேற்று தண்ணீர் வரத்து அதிகம் இருந்ததால் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர் உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணி மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    நேற்று மாலை முதல் ஊட்டியில் சாரல் மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல மழைவிடாமல் தூறிக் கொண்டே இருந்தது. இதனால் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

    மழை வலுவாக பெய்யாமல் தூறிக்கொண்டே இருந்ததால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்தது,

    நேற்று விடுமுறை என்பதால் ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தனர்.

    இன்று காலையிலும் மழை தூறி கொண்டே இருந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரம்ஜான் பண்டிகையையொட்டி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சிறப்பு தொழுகை நடந்தது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடுங் குளிர் நிலவியது. இதனால் பெரும்பாலான மக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே சென்று வந்தனர்.

    மழையால் வானம் மேக மூட்டத்துடன் சூரியனே தெரியாத அளவுக்கு இருட்டி காணப்பட்டது. இதனால் காலை நேரத்தில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை போட்டப்பட்டு ஊர்ந்து சென்றன.

    இதேபோல் மாவட்டத்தில் குன்னூர், கூடலூர், பந்தலூர், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
    Next Story
    ×