search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்
    X

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

    மக்கள் ஆதரவுடன் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிப்படுத்த விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    வாலாஜா:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா, சட்டமன்ற வைர விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராணிப்பேட்டையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இங்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் நாம் தான் ஆட்சியில் இருப்பது போல் உள்ளது. காரணம் அரசு விழா போல் இந்த கூட்டம் காணப்படுகிறது. நாம் ஆட்சியில் இல்லை என தி.மு.க. எப்போதும் கவலைப்பட்டது கிடையாது.

    கடந்த 1967-ல் குளித்தலையில் தொடங்கி திருவாரூர் வரை 60 ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றி வைர விழா கண்டவர், 19 ஆண்டுகள் தமிழ்நாடு முதல்-அமைச்சராக பணியாற்றியவர், 75 ஆண்டுகள் பொது வாழ்வில் பணியாற்றியவர், 48 ஆண்டு காலம் தி.மு.க. தலைவராக இருக்கின்றவர் என்று பல்வேறு சிறப்புகளை பெற்றவர் கருணாநிதி. இங்கு கூடியுள்ள இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. இந்த முறை ஆட்சியை பிடித்திருக்கிறது. தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் 1.1 சதவீத வாக்குகள்தான் வித்தியாசம். தி.மு.க. இப்போது ஆட்சியில் இல்லாத போதும் 89 எம்.எல்.ஏ.க்களை பெற்று மிகப்பெரிய எதிர்க்கட்சியாக தான் இருக்கிறது.

    ஜெயலலிதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தார். ஆனால் இப்போது நடைபெறுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அல்ல. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் ரூ.5 கோடி முதல் 10 கோடி வரை கொடுக்கப்பட்டு நடைபெறுகிற குதிரைபேர பினாமி ஆட்சி.

    ஜெயலலிதா மரணத்தில் தற்போது வரை மர்மமாக இருக்கிறது. விரைவில் மக்கள் ஆதரவுடன் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிப்படுத்த விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும். தவறு நடைபெற்றிருந்தால் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜனாதிபதி தேர்தல் என்றால் தி.மு.க.வை தேடி வந்தனர். ஆனால் இன்று அ.தி.மு.க. டெல்லியை நாடி போய் ஆதரவளிக்கிறது. இதற்கு காரணம் வருமான வரித்துறை மேல் உள்ள பயம். தமிழ்நாட்டில் தற்போது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள 89 இடங்களில் ஏரி, குளம், நீர் நிலைகளில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இன்றைக்கு இந்தியை மத்திய அரசு கட்டாயமாக்க பார்க்கிறது. ஆந்திராவில் பிறந்த மத்திய மந்திரி வெங்கைய நாயுடு இந்தியை தாய்மொழி என்கிறார்.

    தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்த கருத்தரங்கு நடத்தினோம். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் இந்தி கற்காமல் எப்படி வடமாநிலங்களில் நாங்கள் வேலைக்கு செல்வது என்று கேட்டனர். நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைத்தான் தி.மு.க. எதிர்க்கிறது என்றோம். இந்தியாவை ‘இந்தி’யாவாக மாற்ற வேண்டாம். தமிழ் மொழிக்கு ஆபத்து என்றால் தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×