search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் பரவலாக மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு
    X

    நெல்லையில் பரவலாக மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

    நெல்லை மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கடும் வெயில் வாட்டியது. கடந்த மாத இறுதியில் இருந்து கால நிலை மாறியது. அவ்வப்போது காற்றுடன் மழை பெய்தது. வெயிலும் அடித்தது. எனினும் மலைப்பகுதியில் மழை இல்லாததால் அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கியது.

    நேற்று காலையில் இருந்தே மலைப்பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. இரவு பாபநாசம், குற்றாலம், செங்கோட்டை மலைப்பகுதியில் கன மழை பெய்தது. இன்று காலை வரை மழை தூறியபடி இருந்தது. மாவட்டத்தில் அம்பை, தென்காசி, நாங்குநேரி, சேரன்மகாதேவி, களக்காடு பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்தது.

    இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த கால நிலை நிலவியது. அவ்வப்போது சாரல் தூறியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். களக்காடு பத்மநேரி, சிங்கிகுளம் சாலையில் மழையினால் பழமையான ஆலமரம் சாய்ந்து விழுந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் திரண்டு அகற்றினார்கள்.

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 31.55 அடியாக இருந்தது. இரவு பெய்த மழையினால் இந்த அணை நீர்மட்டம் 2.35 அடி அதிகரித்து 33.90 அடியாக உயர்ந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1295 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து 437 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 25.25 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5.36 அடி உயர்ந்து 30.61 அடியாக அதிகரித்தது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 32.26 அடியாக உள்ளது. நேற்று 45 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் இன்று 46 அடியாகவும், 31.25 அடியாக இருந்த குண்டாறு அணை நீர்மட்டம் 33.25 அடியாகவும், 43.15 அடியாக இருந்த அடவிநயினார் அணை நீர்மட்டம் 47.25 அடியாகவும் உயர்ந்து உள்ளன.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 43 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அணைப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் இன்று காலைவரை பதிவான மழை அளவு விவரம்(மில்லிமீட்டரில்) வருமாறு:

    குண்டாறு 43, பாபநாசம் 34, செங்கோட்டை 22, கொடுமுடியாறு 20, அடவிநயினார் அணை 17, சேர்வலாறு 13, கருப்பாநதி 8, சேரன்மகாதேவி 8, ஆய்க்குடி 6.2, அம்பை 5.4,நாங்குநேரி 3, ராமநதி 3, கடனா அணை 2, பாளை 1.



    களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் இன்று காலை முதலே மழை பெய்தது. இதனால் பத்மநேரி-சிங்கிகுளம் சாலையில் உள்ள பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து அங்கு நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×