search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.
    X
    குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

    குற்றாலம் மலைப்பகுதியில் பலத்த மழை: ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை

    குற்றாலம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
    தென்காசி:

    நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களும் சாரல் மழையுடன் குளுகுளு சீசன் நிலவும். அப்போது குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அருவிகளில் குளித்து மகிழ்வதற்காக பல்வேறு இடங்களில் இருந்தும் வருவார்கள்.

    இந்த ஆண்டு குற்றால சீசன் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கியது. அதிலிருந்து 2 வாரம் சீசன் ஓரளவு நன்றாக இருந்தது. 3-வது வாரம் சாரல் மறைந்து வெயில் அடித்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து சீசன் டல் அடிக்க தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குற்றால மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    இதனால் குற்றால சீசன் மீண்டும் களை கட்ட தொடங்கி உள்ளது. இன்று காலை மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் விழுந்தது. பழைய குற்றால அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது.

    ரம்ஜான் விடுமுறை என்பதால் குற்றாலத்தில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அருவிக் கரைகளில் போலீசார் நின்று கொண்டு சுற்றுலா பயணிகளை வரிசையாக ஒழுங்குபடுத்தி அருவிகளில் குளிக்க அனுமதித்தனர். பழைய குற்றாலத்தில் நேற்று மாலை வரை மிதமாகவே தண்ணீர் விழுந்து வந்தது. ஆனால் இன்று காலை முதல் பழைய குற்றாலத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியுள்ளது.

    அருவிகளில் கொட்டும் தண்ணீரில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். ஒருவார இடைவெளிக்கு பின்னர் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ள தால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்நிலையில் குற்றாலம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.


    Next Story
    ×