search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார் நிர்மலா சீதாராமன்
    X

    ஜி.எஸ்.டி. வரி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார் நிர்மலா சீதாராமன்

    ஜி.எஸ்.டி. வரி குறித்த தமிழக வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரி வருகிற 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது.

    இந்த வரி பற்றிய விளக்க கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், சிறு, குறு தொழிலதிபர்கள், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட அரிசி மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகி மோகன், ‘ஜி.எஸ்.டி. வரியில் பாரம்பரிய உணவு பொருளான சாமானிய மக்கள் சாப்பிடும் பாசுமதி அரிசி அல்லாத மற்ற அரிசி வகைகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஆடம்பர பொருளான தங்கத்துக்கு 3 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே சாமானிய மக்களின் உணவு பொருளான அரிசிக்கு ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேசிய நடிகை குட்டி பத்மினி “ தொலைக் காட்சி தொடர்கள் தயாரிப்பு பணிகளுக்காக வெளியூர், வெளிநாடுகளில் இருந்து கலைஞர்களை அழைக்கிறோம். அவர்களுக்கு பேசப்படும் தொகையை முன்பணமாகவே பெற்று கொள்கிறார்கள்.

    அவர்கள் பாதியிலேயே முடித்து விட்டு சென்று விடும் போது வரி உண்டா? இல்லையா? என்பதில் குழப்பம் இருக்கிறது. அதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

    சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசும் போது, சினிமா தயாரிப்புக்கான வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், சினிமா துறையின் பங்களிப்பு மிக மிக முக்கியம். அவர்களுக்கு என்னென்ன பாதிப்பு என்று சொன்னால் அது பற்றி அதிகாரிகளின் விளக்கத்தை கேட்டு ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு எடுத்து செல்வோம் என்றார்.

    கோரைபுல்லில் இருந்து தயாரிக்கப்படும் கோரைப் பாய்கள் சாதாரணமக்கள் பயன்படுத்துவது. இந்த பாய்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரைப்பாய் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார்.

    தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சங்கரன் பேசும் போது, பிளாஸ்டிக் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.

    ஜவுளி விற்பனையாளர்கள் ஜவுளி விற்பனை மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், முன்பு கையால் எழுதி கணக்கு வைத்தீர்கள். அதை சரிக்கட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தீர்கள். இனி அந்த நிலைமை இருக்காது.

    கம்ப்யூட்டரில் கணக்குகளை பதிவு செய்யுங்கள். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ஜி.எஸ்.டி. வரி கவுன்சில் சென்னை மண்டல ஆணையர் சி.பி.ராவ், திருச்சி மண்டல ஆணையர் ஏ.எம். கென்னடி, பா.ஜனதா துணை தலைவர் பி.டி. அரசகுமார், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சி. தங்கமணி, அனுசந்திர மவுலி, எம்.என்.ராஜா, கரு. நாகராஜன், காளிதாஸ், டால்பின் ஸ்ரீதரன், தனஞ்செயன், ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×