search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி கற்பழிப்பு வழக்கில் கைது: 20 வயது பெண் என ஏமாற்றி திருமணம் செய்து வைத்தனர் - வாலிபர் வாக்குமூலம்
    X

    மாணவி கற்பழிப்பு வழக்கில் கைது: 20 வயது பெண் என ஏமாற்றி திருமணம் செய்து வைத்தனர் - வாலிபர் வாக்குமூலம்

    நாகர்கோவிலில் 40 நாட்கள் வீட்டுக்குள் சிறை வைத்து 16 வயது மாணவியை கற்பழித்த ராபர்ட் பெல்லார்மின்னை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த பள்ளம்துறையைச் சேர்ந்தவர் ராபர்ட் பெல்லார் மின் (வயது 41), ஓட்டல் உரிமையாளர்.

    ராபர்ட் பெல்லார்மினுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியும், குழந்தைகளும் பிரிந்து சென்று விட்டனர். இதனால் ராபர்ட் பெல்லார்மின் 2-வது திருமணம் செய்ய விரும்பினார்.

    இதற்காக நண்பர் ஒருவர் மூலம் பெண் பார்க்க கேட்டுக்கொண்டார். அவர், தஞ்சையைச் சேர்ந்த ஏழை குடும்பத்து பெண்ணை ராபர்ட் பெல்லார்மினுக்கு திருமணம் பேசி முடித்தார்.

    அதன்படி, அந்த பெண்ணை ராபர்ட் பெல்லார்மின் திருமணம் செய்து கொண்டார். அவரை நாகர்கோவில் குருசடியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்திருந்தார்.

    அந்த பெண் குறித்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் குருசடி வீட்டுக்கு சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், 16 வயது சிறுமி என்றும், இப்போதுதான் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ராபர்ட் பெல்லார்மின் மீது போஸ்கோ சட்டப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ராபர்ட் பெல்லார்மின்னை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தனர்.

    நேற்று பிற்பகல் வடசேரி பஸ் நிலையத்தில் ராபர்ட் பெல்லார்மின்னை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மகளிர் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நான், மாணவியை ஏமாற்றி திருமணம் செய்யவில்லை. அவரது பெற்றோரிடம் பேசிதான் திருமண ஏற்பாடுகள் செய்தேன். அப்போது மாணவியின் பெற்றோர் என்னிடம் அவருக்கு 20 வயது ஆகியதாக தெரிவித்தனர். அதனால்தான் நானும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன்.

    மாணவியுடன் வீட்டில் மகிழ்ச்சியாகதான் இருந்தோம். அவருக்கும் என்னுடன் தான் வாழவே விருப்பம். நானும் அவருடன்தான் வாழ்வேன். எங்களை யாரும் பிரிக்க முடியாது. நான், எந்த தவறும் செய்யவில்லை. அதனால்தான் ஓடி ஒளியவில்லை.

    இப்போது அவரது பெற்றோர் என்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படி ஈடுபட்டுள்ளதாக நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைதான ராபர்ட் பெல்லார்மினை போலீசார் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர், நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு நேற்று மருத்துவ பரிசோதனை முடிந்தது. அவரை போலீசார் நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

    இன்று அவர்கள் மாணவியை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். அதன் பிறகே மாணவி பெற்றோருடன் அனுப்பி வைக்கப்படுவார் என தெரிகிறது.
    Next Story
    ×