search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் பேரறிவாளன் தாயார் சந்திப்பு: மகனை பரோலில் விடுவிக்க கோரிக்கை
    X

    அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் பேரறிவாளன் தாயார் சந்திப்பு: மகனை பரோலில் விடுவிக்க கோரிக்கை

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேசினார். அப்போது பேரறிவாளனை பரோலில் விடுவிக்கக் கோரிக்கை விடுத்தார்.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தி வருகிறார்.

    சட்டசபைக்கு நேற்று வந்த பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேசினார். சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் அவர் மனு அளித்தார். அப்போது அவருடன் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு அற்புதம்மாள் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது மகன் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பலரும் முயற்சி எடுத்தனர். இன்றைக்கு எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் சட்டசபையில் வலியுறுத்துகிறார்கள். இதற்காக அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகைகளும், தொலைக்காட்சி, சமூக ஊடகங்களும் எனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறது. இதற்காக அவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஜெயலலிதா உயிரோடு இருந்த போது என் மகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் காக கடும் முயற்சி எடுத்தார். அவர் எடுத்த முயற்சி எதனால் தடைப்பட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனது கணவரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அவரை பார்ப்பதற்கு எனது மகனுக்கு பரோல் வழங்க வேண்டும்.

    பரோல் கொடுப்பது மாநில அரசின் உரிமை என மத்திய அரசிடம் கடைசி வரை ஜெயலலிதா போராடினார். சுப்ரீம் கோர்ட்டை கூட அவர் நாடினார். மாநில அரசின் அனைத்து உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஆகவே பரோல் கொடுப்பது என்பது மாநில அரசின் உரிமை என்பதை தற்போதைய முதல்-அமைச்சர் பழனிசாமி கையில் எடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    கடந்த 26 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறையிலேயே இருக்கிறான். என் மகனை கொலைகாரன், கொலை காரன் என்று சொல்லி பல ஆண்டுகளாக இந்த வழக்கு பற்றி தமிழகத்தில் யாரும் பேசவில்லை. ஆனால் சட்டசபையில் அவர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி அங்கீகாரம் கொடுத்தவர் ஜெயலலிதா தான். ஜெயலலிதா இறந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பு. ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி செய்யும் இந்த அரசு, அவர் வழியில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

    சி.பி.ஐ. வழக்கு என்பதால் பரோல் மறுக்கப்படுவதாக காரணம் சொல்கிறார்கள். வயதான காலத்தில் நாங்கள் கேட்பதெல்லாம், சிறிது காலம் என் மகனோடு வாழ வேண்டும் என்பது தான். 26 வருடம் கழித்து நியாயப்படியும், சட்டப்படியும் பரோல் கேட்கிறோம். எனவே தமிழக அரசு என் மகனை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×