search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளர்கள் ‘திடீர்’ வேலை நிறுத்தம்

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளர்கள் ‘திடீர்’ வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் சிரமப்பட்டனர்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களும், காவலாளிகளும் சுமார் 250 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். மதுரையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இதற்காக காண்டிராக்ட் எடுத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும், காவலாளிகளுக்கும் சம்பளம் வழங்கி வருகிறார்கள்.

    இதில் பெண் துப்புரவு தொழிலாளர்கள் மட்டும் சுமார் 150 பேர் உள்ளனர். இந்த துப்புரவு பணியாளர்களுக்கும், காவலாளிகளுக்கும் தற்போது புதிய மேலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்த துப்புரவு பணியாளர்களும், காவலாளிகளும் பணிக்கு செல்லாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் தரையில் அமர்ந்து ஒன்று கூடி கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு வார விடுமுறை விடப்பட வேண்டும், ஓய்வறை ஒதுக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பழைய மேலாளரை மீண்டும் பணி அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணிகள், பாதுகாப்பு பணிகள் இன்று முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. நோயாளிகளை ஸ்டிரெச்சரில் வைத்து வார்டுகளுக்கு கொண்டு செல்ல துப்புரவு தொழிலாளர்கள் வராததால், நோயாளிகளின் உறவினர்களே ஸ்டிரெச்சரை தள்ளி சென்றனர்.

    கழிவறைகள், சாப்பிடும் அறைகள் சுத்தம் செய்யாமலும் ஏராளமான பணிகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் நோயாளிகள் சிரமப்பட்டனர்.

    இது தொடர்பாக போராட்டம் நடத்தி வருபவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் சுமார் 4 மணி நேரத்திற்கு பின்பு துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.
    Next Story
    ×